கோவை அருகே ரூ.25.5 லட்சம் சிக்கியது: ஹவாலா பணமா என போலீசார் விசாரணை
கோவை அருகே ரூ.25.5 லட்சம் சிக்கியது: ஹவாலா பணமா என போலீசார் விசாரணை
ADDED : நவ 06, 2025 10:13 PM

போத்தனூர் : கோவை, வேலந்தாவளம் சோதனை சாவடி அருகே, பைக்கில் கொண்டு வரப்பட்ட, 25.5 லட்சம் ரூபாய் ரொக்கம் சிக்கியது.
கோவை மாவட்டம், பேரூர் சரக டி.எஸ்.பி., சிவகுமாருக்கு, கேரளாவிற்கு பணம் கடத்தி செல்லப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், மதுக்கரை போலீஸ் எஸ்.ஐ., பாண்டியராஜன் போலீசாருடன், வேலந்தாவளம் சோதனை சாவடி அருகே சோதனையில் ஈடுபட்டார்.
அப்போது, பைக்கில் வந்த ஒருவரை நிறுத்தி விசாரித்ததில், அவர், கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், மாங்கடா பகுதியை சேர்ந்த முனீர், 40 என்பதும், பைக் சீட்டின் அடிப்பகுதியில் 25.5 லட்சம் ரூபாய் இருப்பது தெரிந்தது.
தொடர்ந்து நடத்திய விசாரணையில், கேரள மாநிலம், பெருந்தல்மன்னாவை சேர்ந்த முனீரின் நண்பர் நிசார், 40, நேற்று காலை, 200 கிராம் தங்கத்தை கொடுத்து, உக்கடத்தில் விற்று, ரொக்கமாக கொண்டு வர கூறியுள்ளார்.இதையடுத்து முனீர் தங்கத்தை விற்று பணத்தை கேரளாவிற்கு கொண்டு செல்ல முயன்றது தெரிய வந்தது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'முனீர் தங்கத்தை விற்ற பணம் என்று கூறுகிறார். அது உண்மையா என தெரியவில்லை. இது ஹவாலா பணமா என்ற கோணத்திலும் விசாரிக்கப்பட்டு வருகிறது' என்றனர்.
இதனை தொடர்ந்து, 25.5 லட்சம் ரூபாய் ரொக்கம், பைக் ஆகியவற்றுடன், முனீரை வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர்.

