ரூ.28 கோடி லஞ்சம் பெற்ற வழக்கு: மாஜி அ.தி.மு.க., அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு!
ரூ.28 கோடி லஞ்சம் பெற்ற வழக்கு: மாஜி அ.தி.மு.க., அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு!
UPDATED : அக் 23, 2024 02:55 PM
ADDED : அக் 23, 2024 08:14 AM

சென்னை: ரூ.28 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில், ஒரத்தநாடு எம்.எல்.ஏ.வும், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கத்திற்கு சொந்தமான வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
2011ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம். ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளராகவும், ஒரத்தநாடு எம்.எல்.ஏ.வாகவும் உள்ளார். அவர் அமைச்சராக இருந்த போது, ரூ.28 கோடி லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அவரின் 2 மகன்கள், உள்பட 11 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று(அக்.,23) தஞ்சாவூர், ஒரத்தநாடு அருகே உள்ள உறந்தைராயன்குடிகாடு பகுதியில் வைத்திலிங்கத்திற்கு சொந்தமான வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
11 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். சென்னையில் எம்.எல்.ஏ.,க்கள் குடியிருப்பில் உள்ள வைத்திலிங்கம் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். எம்.எல்.ஏ., விடுதியில் வைத்திலிங்கம் இல்லாததால், அவரது உதவியாளர் இடம், வீட்டின் சாவியை பெற்றுக்கொண்டு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
வைத்திலிங்கம் வீட்டில் சோதனை நடைபெற்ற அதே தருணத்தில் அவரது மகனின் தி.நகர் வீட்டிலும் அதிகாரிகள் அதிரடி சோதனையில் இறங்கினர். பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற சோதனைகளின் போது முறைகேடு தொடர்பான, ஆவணங்கள் கைப்பற்றப்பட்டனவா? என்பது குறித்து அதிகாரிகள் தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
அறப்போர் இயக்கத்தின் புகாரின் பேரில், தான், அ.தி.மு.க., மாஜி அமைச்சர் வைத்திலிங்கம் உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.