கலால் உதவி கமிஷனர் காரில் சிக்கியது ரூ.3.75 லட்சம்; மடக்கியது லஞ்ச ஒழிப்பு போலீஸ் படை!
கலால் உதவி கமிஷனர் காரில் சிக்கியது ரூ.3.75 லட்சம்; மடக்கியது லஞ்ச ஒழிப்பு போலீஸ் படை!
ADDED : மார் 09, 2025 06:19 AM

விருதுநகர்: விருதுநகரில் ரூ.3.75 லட்சத்துடன் காரில் சென்ற மாவட்ட கலால் துறை உதவி கமிஷனர் கணேசனிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.
திருச்சியைச் சேர்ந்த கணேசன் 58, விருதுநகர் மாவட்ட கலால் துறை உதவி கமிஷனராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்றிரவு விருதுநகரில் இருந்து திருச்சிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது சத்திர ரெட்டியப்பட்டி போலீஸ் சோதனைச் சாவடியில் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் காரை சோதனையிட்டனர். அதில் ரூ.3 லட்சத்து 75 ஆயிரம் இருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து அவரை விருதுநகர் கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரித்தனர். தனியார் மதுக்கூடங்கள் மற்றும் மெத்தனால் பயன்படுத்தும் நிறுவனங்களில் இருந்து பணத்தை லஞ்சமாக பெற்றுக் கொண்டு சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படுவது விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர். பணத்தை பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.