மணல் குவாரிகளில் ரூ.4,730 கோடி ஊழல்: லஞ்ச ஒழிப்பு துறையில் புகார்
மணல் குவாரிகளில் ரூ.4,730 கோடி ஊழல்: லஞ்ச ஒழிப்பு துறையில் புகார்
ADDED : டிச 28, 2025 12:09 AM

சென்னை: தமிழக மணல் குவாரி களில், 4,730 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையில், வழக்கறிஞர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து, வழக்கறிஞர் தமிழ்ச்செல்வன் என்பவர் லஞ்ச ஒழிப்புத் துறையில் அளித்துள்ள புகாரில் கூறப்பட்டு உள்ளதாவது:
கடந்த 2024 ஜூன் 13ம் தேதி, அமலாக்கத்துறை அனுப்பிய அதிகாரப்பூர்வ ஆவணங்களின் அடிப் படையில், தமிழக மணல் குவாரிகளில் மிகப்பெரிய அளவில் சட்டவிரோத நடவடிக்கைகள் நடந்தது உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் 2021 முதல் 2023 வரை, 28 குவாரிகளில் மணல் அள்ளும் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டன. இவற்றில் சில குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்களுக்கு, அதிகாரிகள் சாதகமாக செயல்பட்டுள்ளனர்.
அதன்படி, சுரங்க விதிகள் மற்றும் மத்திய அரசின் வழிகாட்டுதல்களும் மீறப்பட்டுள்ளன. இதற்கு, துறை அதிகாரிகள் உடந்தையாக இருப்பது தெளிவாகிறது.
ஆற்றங்கரை மணல், ஜல்லி மற்றும் கல் குவாரிகளில், சட்டவிரோத சுரங்கம் மற்றும் கூடுதல் கட்டணம் வசூலித்ததை, அமலாக்கத்துறை உறுதி செய்துள்ளது.
குறிப்பாக, கான்பூர் ஐ.ஐ.டி., தொழில்நுட்ப குழுவினர், 'ட்ரோன்'கள் வாயிலாக நடத்திய ஆய்வில், அனுமதிக்கப்பட்ட அளவை விட, 21 மடங்கு அதிகமாக மணல் எடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதனால், அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் முடக்கப்பட்டு, தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு பலன் கிடைத்துள்ளது.
வெறும் 12.10 ஏக்கர் பரப்பளவில் மணல் எடுக்க அனுமதி பெற்று, சட்டவிரோதமாக 2,439 ஏக்கர் பரப்பளவில் மணல் அள்ளப்பட்டுள்ளது. தமிழக அரசின் கணக்குகளில் மணல் விற்பனை வாயிலாக, 36.45 கோடி ரூபாய் மட்டுமே வருவாய் காட்டப்பட்டுள்ளது.
ஆனால், உண்மையில் 4,730 கோடி ரூபாய் மதிப்பிலான மணல் கொள்ளை அடிக்கப்பட் டுள்ளது தெரிய வந்துள்ளது .
மணல் குவாரிகளில் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களின் வேலை நேரத்தை ஆய்வு செய்ததில், விதிகளை மீறி, 24 மணி நேரமும் மணல் அள்ளப்பட்டது, ஜி.பி.எஸ்., தரவுகள் வாயிலாக கண்டறியப்பட்டுள்ளது.
ஏற்கனவே, சட்ட விரோத மணல் கொள்ளை என்பது, இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் 'திருட்டு' என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
எனவே, இந்த ஊழல் தொடர்பாக, உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும். தாமதம் செய்தால், ஆதாரங்கள் அழிக்கப்பட வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

