மூட்டைக்கு ரூ.50 கமிஷன் தொகை நெல் கொள்முதல் நிலையங்களில் ‘கறார்’
மூட்டைக்கு ரூ.50 கமிஷன் தொகை நெல் கொள்முதல் நிலையங்களில் ‘கறார்’
UPDATED : அக் 03, 2026 12:00 AM
ADDED : அக் 02, 2026 11:26 PM
சென்னை: நெல் கொள்முதல் நிலையங்களில், மூட்டைக்கு 50 ரூபாய் கமிஷனாக வசூலிக்கப்படுகிறது.
தமிழகம் முழுதும், விவசாயிகள் அறுவடை செய்யும் நெல் மூட்டைகளை, தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம் கொள்முதல் செய்கிறது. இதற்காக, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுகின்றன.
இதற்கான பரிந்துரைகளை, கலெக்டர்கள் வழங்குகின்றனர். அவர்களின் நேரடி கண்காணிப்பில், நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. தி.மு.க., ஆட்சியில் நெல்லை விற்பனைக்கு கொண்டு வரும் விவசாயிகளிடம், மூட்டைக்கு 40 ரூபாய் கமிஷன் வசூலிக்கப்பட்டது.
இந்த கமிஷன் பணத்தை, அதிகாரிகள், கூலித் தொழிலாளர்கள் பகிர்ந்து கொண்டனர். தமிழக வெற்றிக்கழக அரசு பொறுப்பேற்ற பின், 40 ரூபாய் கமிஷன் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடக்கும் முறைகேடுகள் குறித்து, புகார் அளிப்பதற்காக ‘வாட்ஸாப் எண்’ வெளியிடப்பட்டது.
ஆனாலும், நெல் கொள்முதல் நிலையங்களில், கமிஷன் வசூல் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை. தற்போது 50 ரூபாய் கமிஷன் வசூலிக்கப்படுகிறது.
இது குறித்து, காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் சிலர் கூறியதாவது:
நெல் அறுவடை முடிந்து, 50 நாட்கள் கடந்த நிலையில், இப்போதுதான் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளன. வட கிழக்கு பருவமழை காலம் நெருங்குவதால், அதற்குள் மூட்டைகளை விற்பனை செய்ய வேண்டியுள்ளது. இந்த நெருக்கடியை பயன்படுத்தி, கொள்முதல் நிலையங்களில், மூட்டைக்கு 50 ரூபாய் கமிஷனாக வசூலிக்கப்படுகிறது.
இந்த தகவலை வெளியில் கூறினால், அரசு நடவடிக்கை எடுத்து, கொள்முதல் நிலையங்களை மூடிவிடும் என, நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால், வேறு வழியின்றி, நெல் மூட்டைக்கு 50 ரூபாய் கமிஷன் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
