ADDED : பிப் 13, 2024 04:29 AM
சென்னை : சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட, 50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரத்தில், தனியார் நிறுவனங்களிடமிருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை பின்னி மில் பகுதியில், அடுக்குமாடி குடியிருப்பு கட்டிய போது, 2015 - 17 காலட்டத்தில் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், பொதுப்பணியில் இருப்பவர்களுக்கு, 50.86 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சமீபத்தில் சோதனை நடத்தினர்.
அதேபோல, அமலாக்கத்துறை அதிகாரிகளும் தனியாக வழக்கு பதிவு செய்து, கே.எல்.பி., புராஜெக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், லேண்ட்மார்க் குரூப், பின்னி லமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில், கடந்த 9ம் தேதி முதல் சோதனை நடத்தினர்.
தொடர்ந்து மூன்று நாட்களாக நடத்தப்பட்ட சோதனையில், மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகளுக்கு சட்ட விரோதமாக வழங்கப்பட்ட பணம் தொடர்பான முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
அத்துடன், வணிகம் தொடர்பான ஆவணங்கள், அசையும் மற்றும் அசையா சொத்துகளின் விபரங்கள் உள்ளிட்டவையும், பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.