ரூ.7,000 கோடி கோகைன் கடத்தல் டில்லி, மும்பையில் ஈ.டி., ரெய்டு
ரூ.7,000 கோடி கோகைன் கடத்தல் டில்லி, மும்பையில் ஈ.டி., ரெய்டு
ADDED : அக் 12, 2024 04:13 AM

புதுடில்லி: கடந்த ஒரு வாரத்தில், 7,000 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் டில்லி மற்றும் மும்பையில் அமலாக்கத்துறையினர் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
தென்மேற்கு டில்லியின் மஹிபால்புர் என்ற இடத்தில், 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான கோகைன் போதைப் பொருளை டில்லி போலீசார் கடந்த வாரம் பறிமுதல் செய்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக, துபாயை சேர்ந்த தொழிலதிபர் வீரேந்தர் பசோயா என்பவரை தேடப்படும் குற்றவாளியாக டில்லி போலீசார் அறிவித்தனர்.
இதை தொடர்ந்து, மேற்கு டில்லி ரமேஷ் நகர் பகுதியில் உள்ள சிறிய கடையில், உணவுப் பொருட்களை போல பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 208 கிலோ கோகைன் போதை பொருள் நேற்று முன் தினம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு 2,000 கோடி ரூபாய்.
இந்த கோகைன் போதைப் பொருள் தென் அமெரிக்காவில் இருந்து டில்லி எடுத்து வரப்பட்டுள்ளது. பிரிட்டன் குடியுரிமை பெற்ற இந்திய வம்சாவளியான சவீந்தர் சிங் என்பவர் இந்த கடத்தலுக்கு காரணமாக இருந்துள்ளார்.
இவர், டில்லியில் 25 நாட்கள் தங்கியிருந்து இந்த போதைப் பொருள் வினியோகம் உள்ளிட்ட பணிகளை ஒருங்கிணைத்ததாக கூறப்படுகிறது. அவரது கூட்டாளிகள் நால்வர் கடந்த 2ம் தேதி போலீசில் சிக்கியதை அடுத்து, சவீந்தர் சிங் பிரிட்டன் தப்பி சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது.
இந்நிலையில், சவீந்தர் உட்பட, ஆறு பேர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கோகைன் கடத்தல் தொடர்பாக டில்லி மற்றும் மும்பையின் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று அதிரடி சோதனை யில் ஈடுபட்டனர்.

