சிறுபான்மையினருக்கு ரூ.75 கோடி கடன்: திட்டத்தை துவக்கி வைத்தார் முதல்வர்
சிறுபான்மையினருக்கு ரூ.75 கோடி கடன்: திட்டத்தை துவக்கி வைத்தார் முதல்வர்
ADDED : டிச 14, 2024 12:13 AM

சென்னை: சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில், சிறுபான்மையினருக்கு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், 75 கோடி ரூபாய் கடன் வழங்கும் பணியை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம், 1999ல் அமைக்கப்பட்டது. இதன் வழியே, சிறுபான்மையினருக்கு சிறு வணிகம், வியாபாரம் செய்வதற்கு, குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது.
சிறுபான்மையின மக்கள் பொருளாதார முன்னேற்றத்திற்காக, தனிநபர் காலக்கடன், கைவினை கலைஞர்களுக்கான விரசாத் கடன், சிறுகடன், கல்விக்கடன் போன்றவை வழங்கப்படுகின்றன.
நடப்பாண்டு, 75 கோடி ரூபாய் கடன் வழங்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேற்று தலைமை செயலகத்தில், சுய தொழில் செய்ய, தனி நபர் கடனாக, இருவருக்கு 3.80 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, முதல்வர் ஸ்டாலின் வழங்கி கடன் வழங்கும் பணியை துவக்கி வைத்தார்.
அத்துடன், தமிழகத்தில் உள்ள தொன்மையான கிறிஸ்துவ தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், தர்காக்கள் போன்றவற்றை புனரமைத்தல், பழுது பார்த்தல் பணிகள் செய்ய, அரசு நிதிஉதவி வழங்குகிறது.
கிறிஸ்தவர்களுக்கான கல்லறை தோட்டம்; முஸ்லிம்களுக்கான கபர்ஸ்தான்களுக்கு, புதிதாக சுற்றுச்சுவர், பாதை அமைத்தல் போன்ற பணிகளுக்கு நிதிஉதவி வழங்கப்படுகிறது.
இந்த திட்டங்களின் கீழ், பல்வேறு பணிகளை மேற்கொள்ள, 3.61 கோடி ரூபாய்க்கான காசோலைகளை, சம்பந்தப்பட்ட தேவாலயங்கள் மற்றும் தர்காக்களின் நிர்வாகிகளிடம் முதல்வர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் நாசர், தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் நவாஸ்கனி, எம்.எல்.ஏ., இனிகோ இருதயராஜ் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.