எட்டு ஆண்டுகளில் ரூ.80 லட்சம் செலவு; ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இல்லை தீர்வு
எட்டு ஆண்டுகளில் ரூ.80 லட்சம் செலவு; ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இல்லை தீர்வு
ADDED : ஜன 23, 2025 05:20 AM

கோவை.: கடந்த எட்டு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வை, திருத்தம் செய்ய சட்டப் போராட்டத்துக்காக, ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள், தங்கள் ஓய்வூதியத்தில் இருந்து, ரூ.80 லட்சம் வரை செலவழித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தில், 2018ம் ஆண்டு முதல் ஓய்வு பெற்றவர்கள் அகவிலைப்படியை திருத்தக் கோரி, மிகப்பெரிய சட்டப்போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
தமிழக அரசு தொடர்ந்த பல வழக்குகளை, உச்ச மற்றும் உயர் நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்துள்ளன. அதன் பின்னரும் அரசு தொடர்ந்து ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படியை திருத்தம் செய்யக்கூடாது என்ற நோக்கில், மனுக்களை தாக்கல் செய்து வருகிறது. இது ஓய்வூதியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்ற ஊழியர் ஒருவர் கூறியதாவது:
ஓய்வூதியதாரர்களுக்கு, 54 சதவீதம் வரை அகவிலைப்படி வழங்க வேண்டும். ஆனால், 2016 முதல் அரசு, 5 சதவீதம் மட்டுமே வழங்கி வருகின்றனர்.
7வது ஊதியக்குழு அமல்படுத்துவதற்கு முன், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு, 239 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும். ஆனால் அது, 119 சதவீதமாக மட்டுமே உள்ளது.
நீண்ட சட்ட போராட்டம்
மாற்றங்கள் இல்லாததால், 2018ல், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில், ரிட் மனு தாக்கல் செய்தோம். நீதிமன்றம், 2019ல் எங்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.
குறிப்பிட்ட கால இடைவெளியில், திருத்தம் செய்யப்பட்ட அகவிலைப்படியை விடுவிக்க, டி.என்.எஸ்.டி.சி.,ன் ஓய்வூதிய அறக்கட்டளைக்கு உத்தரவிட்டது.
இதை நிறைவேற்றாததால், பிப்., 2019ல் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதிலும் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.
இந்நிலையில், அரசு அக்., 2019ல் அரசு இயற்றிய அரசாணை, 142 ல் அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும், ஐந்து சவீத அகவிலைப்படியை முடக்கியது.
இதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. எங்களுக்கு சாதகமாக, 2023ல் தீர்ப்பு கிடைத்தது. இதை நிறைவேற்றாததால், ஏப்., 2023ல் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்தோம். அதிலும் எங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு கிடைத்தது.
பல ஓய்வூதியர்கள் உயிரிழப்பு
இதை எதிர்த்து ஓய்வூதிய அறக்கட்டளை, 2023ல் உயர்நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்தது. இதுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதன் பின், ஓய்வூதிய அறக்கட்டளை, மாநில அரசுடன் சேர்ந்து டிச., 2023, சிறப்பு விடுப்பு மனு தாக்கல் செய்தது. அவையும் நிராகரிக்கப்பட்டன. அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவும், கடந்த சனிக்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது.
தற்போது அரசு உச்ச நீதிமன்றத்தின் இறுதித்தீர்ப்பை, மறு ஆய்வு செய்வதற்காக (கியூரேட்டிவ் பெட்டிஷன்), மனு தாக்கல் செய்துள்ளது.
எங்களுக்கு எந்த பலன்களையும் தரக்கூடாது என, அரசு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. கடந்த, 2017 முதல் தமிழகத்தில், 95 ஆயிரம் ஓய்வூதியர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட் டனர். அவர்களின் குடும்பத்தினர் மிகுந்த சிரமத்தில் உள்ளனர்.
இதுவரை எங்கள் ஓய்வூதியத்தில் இருந்து, நன்கொடை பெற்று ரூ.80 லட்சம் வரை சட்ட போராட்டங்களுக்காக செலவழித்து விட்டோம். தீர்வு காண்பதாக, தேர்தல் வாக்குறுதி கொடுத்த தி.மு.க., அரசு, அதை மறந்தே போனது.
இவ்வாறு, அவர் கூறினார்.