சாட்டையடி போராட்டத்தால் பெரிய பதவிகள் வரும்: அண்ணாமலையை கிண்டல் செய்த ஆர்.எஸ்.பாரதி
சாட்டையடி போராட்டத்தால் பெரிய பதவிகள் வரும்: அண்ணாமலையை கிண்டல் செய்த ஆர்.எஸ்.பாரதி
ADDED : டிச 28, 2024 03:54 AM

சென்னை: ''சாட்டையடி போராட்டத்தில் ஈடுபட்டால், மத்திய அரசு சார்பில், பெரிய பதவிகள் வரும் என, அண்ணாமலை எண்ணுகிறார் போலும். இது பகுத்தறிவு அற்ற செயல். சுத்த காட்டுமிராண்டித்தனம் மட்டுமல்ல கேலிக்கூத்துக்குரியது'' என, தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.
சென்னை அறிவாலயத்தில், அவரது பேட்டி:
அண்ணா பல்கலையில் மாணவிக்கு இழைக்கப்பட்ட கொடூரம் வேதனைக்குரிய சம்பவம் தான். அதை யாரும் மறுக்க முடியாது.
அதை வைத்து, பழனிசாமியும் அண்ணாமலையும் அரசியல் செய்வதை ஏற்க முடியாது. அண்ணா பல்கலை, தமிழக கவர்னரின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதை முதலில் அவர்கள் அறிந்து இருக்க வேண்டும். கவர்னரிடம் உள்ள அதிகாரத்தை, மாநில அரசிடம் வழங்க வேண்டுமென, முன்னாள் முதல்வர்கள் ஏற்கனவே வலியுறுத்தி உள்ளனர்.
காவல் துறை அனுமதி பெற்று, அண்ணா பல்கலையில் நுழைவதைவிட, துணைவேந்தர் அனுமதி பெற்று நுழைவதுதான் மிகவும் சிரமம். பல்கலையை பொறுத்தவரை, 24 மணி நேரமும், காவலர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் நடந்தபோது, பாதுகாப்பு பணிகளில் இருந்தவர்கள் விபரம், போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வளாகத்தில் பாதுகாப்பு இல்லை என சிலர் கூறுகின்றனர். அது யாருடைய பொறுப்பு என்பதை உணர்ந்து கூற வேண்டும். இதுபோன்ற சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டதும், குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அ.தி.மு.க., ஆட்சியில், பொள்ளாச்சியில் பல மாணவியர் சம்பந்தப்பட்ட மோசமான வீடியோக்கள் வெளியான நிலையில், அப்போது ஆட்சி அதிகாரத்தில் இருந்த பழனிசாமி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆனால், சென்னை அண்ணா பல்கலை சம்பவத்தில், குற்றவாளி உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையும் மிகவும் சரியான வழியில் செல்கிறது.
நடந்த சம்பவத்துக்கு நியாயம் கேட்டு, கோவையில் அண்ணாமலை சாட்டையால் அடித்து போராட்டம் செய்துள்ளார்.
பொள்ளாச்சி சம்பவத்தின்போது, இவர் சாட்டை போராட்டத்தை ஏன் கையில் எடுக்கவில்லை? இதுபோன்ற போராட்டங்களில் ஈடுபட்டால், அவருக்கு மத்திய அரசு சார்பில் பெரிய பதவிகள் வரும் என, எண்ணுகிறார் போலும்.
இது பகுத்தறிவு அற்ற செயல். சுத்த காட்டுமிராண்டித்தனம் மட்டுமல்ல; கேலிக்கூத்துக்குரியது.
என் அரசியல் வாழ்க்கையில், இதுபோன்று எந்த ஒரு தலைவரும், போராட்டத்தில் ஈடுபட்டது கிடையாது. அண்ணாமலை போராட்டத்தைக் கண்டு, பொதுமக்கள் சிரிக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.