விண்ணப்பித்த அனைத்து மகளிருக்கும் மார்ச் முதல் ரூ.1,000 வினியோகம்
விண்ணப்பித்த அனைத்து மகளிருக்கும் மார்ச் முதல் ரூ.1,000 வினியோகம்
ADDED : ஜன 07, 2025 06:28 AM

சென்னை: மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்த அனைத்து மகளிருக்கும் மாதம், 1,000 ரூபாயை, வரும் மார்ச் முதல் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
கடந்த 2024 செப்டம்பர் முதல் மகளிருக்கு மாதம், 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இதற்காக, இரண்டு கோடி ரேஷன் கார்டுதாரர்களின் வீடுகளில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. இதற்கு, 1.66 கோடி பேர் விண்ணப்பித்தனர்.
அரசு விதித்த நிபந்தனைகள் அடிப்படையில் தேர்வான, 1.15 கோடி பேரின் வங்கி கணக்குகளில் மாதம், 1,000 ரூபாய் செலுத்தப்பட்டு வருகிறது.
இதனால், 1,000 ரூபாய் கிடைக்காதவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
அவர்களிடம், 'அரசுக்கு கடும் நிதி நெருக்கடி உள்ளது; அதனால் தான் அனைவருக்கும் உரிமை தொகை வழங்க முடியவில்லை; விரைவில் நல்ல முடிவை அரசு அறிவிக்கும்' என, அமைச்சர்கள் கூறி வருகின்றனர்.
அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. எனவே, உரிமை தொகைக்கு விண்ணப்பித்த அனைத்து மகளிருக்கும், முதல்வர் ஸ்டாலினின் பிறந்த நாளான வரும் மார்ச் 1 முதல், 1,000 ரூபாயை மாதந்தோறும் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகலாம்.