ரூ.3000 லஞ்சம்: வி.ஏ.ஓ., தலைமறைவு; கைது செய்ய சிறப்பு குழு
ரூ.3000 லஞ்சம்: வி.ஏ.ஓ., தலைமறைவு; கைது செய்ய சிறப்பு குழு
ADDED : ஜூலை 01, 2026 04:25 AM

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே ரூ.3000 லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ., தலைமறைவாகிய நிலையில் கைது செய்ய சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
பரமக்குடி அருகே முதலுார் குரூப் வி.ஏ.ஓ., முத்துக்குமார் 37. இவர் ஏற்கனவே முடிக்கப்பட்ட பட்டா மாறுதலுக்காக ஒருவரிடம் ரூ.5000 லஞ்சம் கேட்டுள்ளார். பேரம் பேசி 3000 ரூபாயாக குறைத்துள்ளார். இதன்படி பெயர் கூற விரும்பாத புகார்தாரர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தெரிவித்தார்.
தொடர்ந்து வி.ஏ.ஓ., அலைபேசியில் கூறியபடி ஜூன் 29 மாலை புகார்தாரர் லஞ்ச பணத்தை சத்திரக்குடியில் உள்ள இ--சேவை மைய ஊழியரிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பணத்தை கைப்பற்றி முத்துக்குமாரை கைது செய்ய சென்றனர்.
ஆனால் அவர் தலைமறைவானார். அவரை கைது செய்ய சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக டி.எஸ்.பி., ராமச்சந்திரன் தெரிவித்தார்.
