ஆர்.எஸ்.எஸ்., பேரணிக்கு அனுமதி வழங்கியது ஐகோர்ட்; தமிழக அரசுக்கு குட்டு
ஆர்.எஸ்.எஸ்., பேரணிக்கு அனுமதி வழங்கியது ஐகோர்ட்; தமிழக அரசுக்கு குட்டு
UPDATED : அக் 01, 2024 07:43 PM
ADDED : அக் 01, 2024 01:25 PM

சென்னை: தமிழகத்தில் 58 இடங்களில் ஆர்.எஸ்.எஸ்., பேரணி நடத்த அனுமதி அளித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
விஜயதசமியை முன்னிட்டு வரும் 6ம் தேதியன்று தமிழகம் முழுவதும் 58 இடங்களில் பேரணி நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ்., தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளில் நேற்றைய விசாரணையின் போது 42 இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட கோர்ட், தமிழக அரசும், போலீசாரும் கண்ணாமூச்சி ஆடுவதாக கடும் அதிருப்தி தெரிவித்தது.
மேலும், கோர்ட்டின் பொறுமையை சோதிக்க வேண்டாம், தி.மு.க., பவள விழாவுக்கு மட்டும் ஒரே நாளில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு வழங்கியது எப்படி என்றும் சரமாரியாக கேள்வி எழுப்பியது. ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்ட இடங்களில் விதிக்கப்பட்டு உள்ள புதிய கட்டுப்பாடுகளை தளர்த்துவது பற்றி முடிவு எடுத்து இன்று தெரிவிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டு இருந்தது.
இந் நிலையில் இந்த வழக்குகள் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 42 இடங்களுடன் கூடுதலாக மேலும் 10 இடங்களுக்கு அனுமதி தரப்படுவதாகவும், 6 இடங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் தமிழக அரசில் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நிபந்தனைகள் அடிப்படையில் மொத்தம் 58 இடங்களில் பேரணி நடத்த அனுமதி அளித்து நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டு உள்ளார்.
இது குறித்து அவர் பிறப்பித்துள்ள உத்தரவின் விவரம் வருமாறு; குறிப்பிட்ட மதத்தினர் வாழும் பகுதி, கொள்கை மாறுபாடு கொண்ட மக்கள் வசிக்கும் பகுதி என்று கூறி ஆர்.எஸ்.எஸ்., பேரணிக்கு அனுமதி மறுக்கக்கூடாது.
நிபந்தனைகளுடன் 6 இடங்களையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 58 இடங்களில் பேரணிக்கு அனுமதி வழங்கப்படுகிறது. எந்த புதிய நிபந்தனைகளையும் விதிக்கக்கூடாது. எதிர்காலத்தில் ஆர்.எஸ். எஸ்., அணிவகுப்புக்கு அனுமதி அளிக்க மறுக்கக்கூடாது.
இவ்வாறு நீதிபதி ஜெயச்சந்திரன் தமது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.