ADDED : ஜன 22, 2026 02:07 AM

அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் தே.ஜ., கூட்டணியில் இணைந்துள்ளதன் பின்னணியில், ஆர்.எஸ்.எஸ்-., பங்கு இருப்பதாக பா.ஜ., வட்டாரங்கள் சொல்கின்றன.
இது தொடர்பாக, அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:
கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போதே பழனிசாமியையும், தினகரனையும் இணைக்க, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முயற்சி எடுத்தார். ஆனால், பழனிசாமி ஒப்புக் கொள்ளவில்லை; அதனாலேயே ஆட்சியை இழந்தார்.
எனவே தான், 2026 சட்டசபை தேர்தலுக்கான வியூகத்தை, ஆர்.எஸ்.எஸ்., வகுத்தது; பா.ஜ-.,வோடு இணைந்து அதை செயல்படுத்தியது. அதன் ஒரு பகுதியாகத் தான், டில்லி ஆர்.எஸ்.எஸ்.,சின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அருண்குமார், கடந்த ஆண்டு நவம்பர் 18-ல், சென்னைக்கு வந்து பழனிசாமியை சந்தித்தார்.
அப்போது, பீஹாரில் எதிரும் புதிருமாக இருந்த நிதிஷ் குமாரையும், சிராக் பஸ்வானையும் ஒரே கூட்டணிக்குள் கொண்டு வந்தது பற்றி, பழனிசாமியிடம் அவர் எடுத்து கூறியுள்ளார்.
தமிழக ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் வாயிலாக, தினகரனிடம் இதே கருத்து பகிரப்பட்டது. அதன்படியே, தே.ஜ., கூட்டணிக்குள் இணைய, இருவரும் ஒப்புக் கொண்டனர்.
இவ்வாறு பா.ஜ., வட்டாரங்கள் கூறின.

