போதைப்பொருள் விற்போரை விடுவிக்க சொல்லும் ஆளுங்கட்சி அன்புமணி குற்றச்சாட்டு
போதைப்பொருள் விற்போரை விடுவிக்க சொல்லும் ஆளுங்கட்சி அன்புமணி குற்றச்சாட்டு
ADDED : ஜூலை 28, 2025 03:37 AM

காஞ்சிபுரம்: தமிழகத்தில் முதல்வர் கட்டுப்பாட்டில் காவல் துறை இயங்குகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது,'' என, காஞ்சிபுரத்தில், தன்னுடைய நடைபயணத்தின் போது, பா.ம.க., தலைவர் அன்புமணி பேசினார்.
அவர் மேலும் பேசியதாவது:
கேட்பது மக்கள் உரிமை. அதை செய்து கொடுக்க வேண்டியது ஒவ்வொரு அரசின் கடமை. முதலில், மக்கள் தங்களுடைய உரிமை எதெல்லாம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
அரசியலமைப்பு நமக்கு கொடுத்துள்ள அடிப்படை உரிமைகள் பல. அது ஏழை மக்களுக்கு கிடைக்காமல் உள்ளது. அடிப்படை உரிமைகள் என்ன என்பதை விளக்கவும் அதை பெறுவது எப்படி என்பதை விளக்கவுமே தமிழகம் முழுதும் நடைபயணம் செல்கிறேன்.
இதைச் செய்கிறோம்; அதை செய்கிறோம் என, தேர்தல் நேரத்தில் வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த தி.மு.க., தற்போது எதையும் செய்து கொடுக்கவில்லை.
அதனால், தமிழகத்தின் அனைத்துப் பிரிவு மக்களும், தங்களுடைய கோரிக்கைகளுக்கும் தினமும் போராடிக் கொண்டிருக்கின்றனர்.
உரிமைக்காக குரல் கொடுக்க ரோட்டுக்கு வந்து போராடி, அரசின் கவனத்தை ஈர்க்க முயன்றால், எதற்கும் போலீசார் அனுமதி கொடுப்பதில்லை. ஏற்கனவே, அரசு மீது கடும் கோபத்தில் இருக்கும் மக்கள், இன்னும் கூடுதலாக கோபமடைவர்.
தமிழகத்தில், கஞ்சா, அபின் உள்ளிட்ட போதைப் பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்கின்றன. பள்ளி, கல்லூரி வாசல்களில் தாராளமாக விற்பனை செய்யப்படுகிறது.
இதையெல்லாம் சரி செய்ய வேண்டிய முதல்வர் ஸ்டாலின், இது குறித்து எதுவுமே தெரியாமல் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்.
காவல் துறைக்கு தெரியாமல் எங்குமே போதைப் பொருள் விற்க முடியாது. ஓரிரு இடங்களில் போதை பொருள் விற்பனையாளர்களை, போலீசார் பிடித்தாலும், உடனே போன் செய்து, அவர்களை தி.மு.க., நிர்வாகிகள் விடுவிக்கச் சொல்கின்றனர்.
தி.மு.க.,வில் முக்கிய பொறுப்பில் இருந்த ஜாபர் சாதிக், மிகப் பெரிய போதைப் பொருள் கடத்தல்காரர் என, மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.
அவர் மட்டுமே, 3,000 கோடி ரூபாய்க்கு போதைப்பொருள் விற்றதாக கைது செய்யப்பட்டார்.
அதனால், தமிழகத்துக்கு தி.மு.க., வேண்டாம். தி.மு.க.,வுக்கு ஓட்டளித்து, மீண்டும் ஒரு தவறுக்கு வித்திட்டுவிடக் கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.
காஞ்சிபுரத்தில், நேற்று நடைபயணம் மேற்கொண்ட பா.ம.க., தலைவர் அன்புமணி, பொதுமக்கள் மத்தியில் பேசினார்.