ADDED : பிப் 04, 2024 02:27 AM

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த சஞ்ஜிப் பானர்ஜி, மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டார். அவரின் பணி ஓய்வை தொடர்ந்து, மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக, சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி எஸ்.வைத்தியநாதனை உச்ச நீதிமன்ற 'கொலிஜியம்' பரிந்துரைத்திருந்தது.
தற்போது, மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதனை நியமித்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த 1962 ஆகஸ்டில், கோவையில் பிறந்த வைத்தியநாதன், சென்னையில் பள்ளிப் படிப்பு, பட்டப்படிப்பு, சட்டப் படிப்பை முடித்தார். 1986ல் பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்தார்.
இவரது தாத்தா எல்.எஸ்.வைத்தியநாதன், சென்னை உயர் நீதிமன்றத்தில் கண்காணிப்பாளராக பதவி வகித்தவர். தந்தை வி.சுப்ரமணியன், 1946ல், 'ஒயிட் காலர் எம்ப்ளாயீஸ் யூனியன்' சங்கத்தை துவங்குவதில் முக்கிய பங்காற்றினார். தொழிலாளர் சட்டம் குறித்த புத்தகங்களின் பதிப்பக ஆசிரியராகவும் இருந்துள்ளார்.
கடந்த 2013ல் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக எஸ்.வைத்தியநாதன் நியமிக்கப்பட்டார். பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்த ராஜா, பணி ஓய்வுக்குப் பின், மூத்த நீதிபதி வைத்தியநாதன் சில நாட்கள் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்தார்.