UPDATED : மே 15, 2024 06:26 AM
ADDED : மே 15, 2024 12:51 AM

நாகர்கோவில்:வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. மே 19 வரை பூஜைகள் நடக்கிறது.
தமிழகத்தில் வைகாசி முதல் தேதி நேற்று பிறந்த நிலையில் கேரளாவில் இன்று வைகாசி முதல் தேதியாகும். இதற்காக சபரிமலை நடை நேற்று மாலை 5:00 மணிக்கு திறக்கப்பட்டது. மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். அதை தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். வேறு விசேஷ பூஜைகள் நடக்கவில்லை. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.
இன்று (மே 15) அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் தந்திரி மகேஷ் மோகனரரு ஐயப்பன் விக்ரகத்தில் அபிஷேகம் நடத்தி நெய்யபிஷேகத்தை துவங்கி வைப்பார். தொடர்ந்து கணபதி ஹோமம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடக்கும். எல்லா நாட்களிலும் காலையில் உஷ பூஜை, உச்ச பூஜை, களபாபிஷேகம், மாலையில் தீபாராதனை, புஷ்பாபிஷேகம், இரவு அத்தாழபூஜை ஆகியவற்றுடன் உதயாஸ்தமன பூஜை, படி பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடக்கும். மே 19 இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.

