ADDED : ஜன 20, 2024 12:02 AM
பெத்தநாயக்கன்பாளையம்:''வரும் லோக்சபா தேர்தலுக்கு ஆயத்த மாநாடாக, சேலம் தி.மு.க., இளைஞர் அணி மாநாடு அமையும்,'' என, நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நேரு தெரிவித்தார்.
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில், தி.மு.க., இளைஞர் அணி மாநில மாநாடு நாளை நடக்க உள்ளது. மாநாட்டு ஏற்பாடுகள் குறித்து, நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நேரு நேற்று ஆய்வு செய்தார்.
இதன்பின் அவர்கூறியதாவது:
தி.மு.க., இளைஞர் அணி மாநில மாநாட்டில், 2.50 லட்சம் பேர் அமரும்படி நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. மாநாடு வளாகம் முழுதும், 5 லட்சம் பேர் அமரும்படி ஏற்பாடு, தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வாகனங்களை, ஜி.பி.எஸ்., முறையில் ஒருங்கிணைத்து அதற்கான, 'பார்க்கிங்' வசதி செய்யப்பட்டுள்ளது. மாநாட்டுக்கு வரும் அனைவருக்கும் மதிய உணவு, குடிநீர் வழங்க, தேவையான வசதிகள், நவீன கழிப்பறைகள் உள்ளன.
மாநாட்டில் பங்கேற்க, முதல்வர் ஸ்டாலின், இன்று மாலை 5:00 மணிக்கு விமானம் வாயிலாக சேலம் வருகிறார். மாநாட்டு பந்தலுக்கு வரும் அவர், சென்னையில் இருந்து, 316 கி.மீ., எடுத்து வரும் சுடரை, மாநாட்டு திடலில் ஏற்றி வைக்கிறார்.
'நீட்' தேர்வு ஒழிப்புக்கு நடக்க உள்ள, இருசக்கர வாகன பேரணியை பார்வையிடுகிறார். தொடர்ந்து, 1,500 'ட்ரோன்'களுடன், 'ட்ரோன் ஷோ' நடக்கிறது. மறுநாள் காலை, 9:00 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், எம்.பி., கனிமொழி, 100 அடி உயர கம்பத்தில், தி.மு.க.,வின் கொடியை ஏற்றுகிறார்.
மாநாடு முன் வைத்துள்ள, ஈ.வெ.ரா., அண்ணாதுரை, கருணாநிதி, அன்பழகன் ஆகியோரது சிலைகள் திறக்கப்பட உள்ளன. அமைச்சர் உதயநிதி, மாநாட்டின் தீர்மானங்களை முன்மொழிகிறார். இதுகுறித்து, 20க்கும் மேற்பட்ட முன்னணி தலைவர்கள் பேசுகின்றனர்.
மாலையில் பொதுச்செயலர் துரைமுருகன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், இளைஞரணி செயலர் உதயநிதியை தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார். வரும் லோக்சபா தேர்தலுக்கு ஆயத்த மாநாடாக, சேலம் தி.மு.க., இளைஞர் அணி மாநாடு அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.