சேலம் மாஜி மந்திரியை கைது செய்ய போலீசார் தீவிரம் :மில் அதிபரை மிரட்டி ரூ.30 கோடி மோசடி புகார்
சேலம் மாஜி மந்திரியை கைது செய்ய போலீசார் தீவிரம் :மில் அதிபரை மிரட்டி ரூ.30 கோடி மோசடி புகார்
ADDED : ஜூலை 17, 2011 01:07 AM
சேலம் : சேலத்தைச் சேர்ந்த பிரபல மில் அதிபரை மிரட்டி, 30 கோடி ரூபாய் சொத்தை, ஆறு கோடி ரூபாய்க்கு வாங்கியதாக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் அவரது வலது கையாக செயல்பட்ட இன்ஸ்பெக்டர் மற்றும் ஆடிட்டர், புத்தகக் கடை அதிபர் உள்ளிட்டோர் மீது புகார் கூறப்பட்டுள்ளது.
நில அபகரிப்பு குழு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னாள் அமைச்சர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. தமிழக முன்னாள் வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. கடந்த ஆட்சியில், நில அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து போன்ற செயல்களில், வீரபாண்டி ஆறுமுகம், அவரது மகன் ராஜா, தம்பி மகன் பாரப்பட்டி சுரேஷ்குமார் உள்ளிட்டோர் ஈடுபட்டதாக, முதல்வர் தனிப்பிரிவுக்கும், மாவட்ட போலீசாருக்கும் புகார் மனுக்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
முதல்வர் ஜெயலலிதா, நில அபகரிப்பு மீட்புக்குழு மூலம், பாதிக்கப்பட்டோரிடம் விசாரணை நடத்தி, அவர்களது நிலங்களை மீட்டுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, போலீஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார். இந்நிலையில், முதல்வர் தனிப்பிரிவுக்கு சில நாட்களுக்கு முன், சேலத்தைச் சேர்ந்த பிரபல மில் அதிபர் ரவிச்சந்திரன் என்பவர் மனு அனுப்பியிருந்தார். அந்த மனுவானது, சேலம் மாநகர போலீஸ் துணை கமிஷனர் பாஸ்கரனுக்கு அனுப்பப்பட்டு, விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.
அந்த விசாரணை குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சேலத்தைச் சேர்ந்த வெங்கடாசலம், ஐந்து ரோடு அருகே மாவு மில் நடத்தி வந்தார். அந்த இடம், தற்போதைய நிலையில், 35 கோடி ரூபாய் வரை விலை போகும். வெங்கடாசலம் தன் மகன்கள் ராமநாதன், வேணுகோபால், ரவிச்சந்திரன், பாலாஜி ஆகியோருடன், அந்த மில்லை நிர்வகித்து வந்தார். கடந்த, 2007ம் ஆண்டு வாக்கில், சேலம் டவுன் பகுதியைச் சேர்ந்த ஆடிட்டர் துரைசாமியிடம், 3 கோடி ரூபாய் கடனுக்காக, அந்த மில்லை பவர் எழுதி கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அவரும், அதற்குரிய வட்டியை செலுத்தி வந்துள்ளார். இந்த நிலையில், மீண்டும் மில்லை திருப்பி வாங்க முயன்றபோது, முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், இன்ஸ்பெக்டர் லட்சுமணன், ஆடிட்டர் துரைசாமி போன்றோர், வெங்கடாசலத்தையும், அவரது மகன்களையும் மிரட்டி, 6.25 கோடி ரூபாய்க்கு வாங்கியதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து, சேலத்தைச் சேர்ந்த பிரபல ஜவுளிக் கடை அதிபர் ஒருவருக்கு, 30 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர். மில் பறிபோனதும், அவமானம் தாங்காமல் வேதனையில், வெங்கடாசலம் உயிரிழந்து விட்டார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன், அவரது மகன்கள், மில்லை மீட்பதற்காக, முதல்வர் ஜெயலலிதா கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரிடம் அளித்த மனு அடிப்படையில், சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. அது தவிர, அங்கம்மாள் காலனி பிரச்னையிலும், வீரபாண்டி ஆறுமுகம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.
நில அபகரிப்பு மீட்புக்குழு போலீசார், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், பிரபல ஜவுளிக்கடை அதிபர், ஆடிட்டர் ஆகியோர் முன் ஜாமின் பெற சென்னை சென்றுள்ளதாக கூறப்படுகிறது. ஜாமின் பெறாதபட்சத்தில், வீரபாண்டி ஆறுமுகம், இன்ஸ்பெக்டர் லட்சுமணன் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்படலாம் என, போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து போலீஸ் துணை கமிஷனர் பாஸ்கரன் கூறியதாவது: புகார் மனு வந்துள்ளது. அது கம்பெனி சட்ட அடிப்படையில் உள்ளது. விசாரணை நடத்தி வருகிறோம். கைது நடவடிக்கை பற்றி இப்போது எதுவும் சொல்வதற்கில்லை, என்றார்.