பொய் வழக்கில் சேலம் துணைவேந்தர் கைது தமிழன் தலைகுனிய வேண்டும்: அண்ணாமலை
பொய் வழக்கில் சேலம் துணைவேந்தர் கைது தமிழன் தலைகுனிய வேண்டும்: அண்ணாமலை
ADDED : ஜன 03, 2024 10:53 PM

சேலம்:''சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் கைது செய்யப்பட்டதற்கு, ஒவ்வொரு தமிழனும் வெட்கி தலைகுனிய வேண்டும்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.
சேலம் லோக்சபா தொகுதி, பா.ஜ., அலுவலகத்தை பனமரத்துப்பட்டி பிரிவு ரோடு அருகே திறந்து வைத்த, அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் பா.ஜ.,வின், 'என் மண்; என் மக்கள்' யாத்திரை, 130 தொகுதிகளில் முடிவடைந்துள்ள நிலையில், இன்னும், 104 தொகுதிகளில் மேற்கொள்ள வேண்டி உள்ளது.
சேலத்தில், இன்று மூன்று தொகுதிகளில் யாத்திரை நடக்கிறது. வரும் பிப்., முதல் வாரத்தில் அனைத்து தொகுதிகளிலும் யாத்திரை முடிவுக்கு வரும்.
காங்., ஆட்சியின், 10 ஆண்டுகளில், 30 லட்சம் கோடி மட்டுமே தமிழகத்துக்கு நிதி வழங்கப்பட்ட நிலையில், பா.ஜ., ஆட்சியில், 120 லட்சம் கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கு மத்திய அமைச்சர்கள், 400 முறை வந்து சென்றுள்ளனர். அனைத்து துறைகளுக்கும், பல மடங்கு நிதி வழங்கப்பட்டுள்ளது.
துாண்டுதலில் வழக்கு
சேலத்தில், தமிழர்கள் ஒவ்வொருவரும் வெட்கி தலைகுனியக் கூடிய அளவில், பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதனின் கைது நிகழ்ந்து உள்ளது.
துணைவேந்தர் ஜெகநாதனை, டிச., 26 மாலை, 4:30 மணிக்கு சேலம் மாநகர போலீஸ் உதவி கமிஷனர் கைது செய்து, போலீஸ் வேனில், 5 மணி நேரம் சுற்றிவிட்டு, இரவு, 9:30 மணிக்கு அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்கு உட்படுத்தி உள்ளனர்.
அதன்பின் நள்ளிரவு, 12:30 மணிக்கு நீதிபதி முன் ஆஜர்படுத்தி, நீண்ட விவாதத்ததுக்கு பின், அதிகாலை, 3:30 மணிக்கு ஜாமினில் அவர் வெளியே வந்துள்ளார்.
'பூட்டர் பவுண்டேஷன்' தனியாரிடம் இருந்து கிடைக்கும் பணத்தை மாணவ, மாணவியரின் ஆற்றல் திறனை அதிகரிப்பதற்கும், வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவும் ஏற்படுத்தப்பட்டது.
எல்லா பல்கலையிலும் இதுபோன்ற நிறுவனங்கள் உள்ளன. அந்த நிறுவனத்தின் லாபத்தில், 1 காசு கூட வெளியே எடுக்க முடியாது.
பூட்டர் நிறுவனத்தில் துணைவேந்தர் தலைமையில் பதிவாளர், இரண்டு பேராசிரியர்கள் பொறுப்பில் உள்ளனர்.
அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் யாரும் பொறுப்பில் இல்லை.
முன்னாள் அமைச்சர் பொன்முடி சொல்லிக் கொடுத்தபடியும், பதிவாளர் நியமனத்தில் அவரின் பேச்சை கேட்கவில்லை என்பதற்காகவே, துாண்டுதலின்பேரில் திட்டமிட்டு வழக்குப்பதிவு செய்து, கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
துணைவேந்தர் கைது தொடர்பாக, டி.ஜி.பி., சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, மத்திய உள்துறை அமைச்சருக்கு புகார் அனுப்ப உள்ளோம்.
சேலம் மாநகர போலீஸ், தி.மு.க.,வின் கொத்தடிமையாக உள்ளது.
முறைகேடுகள்
துணைவேந்தர் விஷயத்தில், உரிமையை பாதுகாக்க பயன்படுத்த வேண்டிய எஸ்.சி., - எஸ்.டி., சட்டம் தவறாக பயன்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இந்த சட்டம் உண்மையிலேயே சமூகத்தில் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு கேடயம்.
அதே நேரத்தில் அதை தவறாக பயன்படுத்துவோர் மீது, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆத்துார் விவசாயிகள் குற்றம் செய்யவில்லை என்றால், அவர்களுக்கு ஆதரவாக நானே களம் இறங்கி போராடுவேன். ஜாதி பெயரை குறிப்பிட்டு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது குறித்து, சம்பந்தப்பட்ட அமைச்சர் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.
வட மாநிலத்தில், பெயரின் பின் ஜாதியை குறிப்பிடுவது வழக்கம். வட மாநில அதிகாரிகள் யாரேனும் விவசாயிகளின் பெயருக்கு பின், ஜாதி பெயரை குறிப்பிட்டு அனுப்பி இருக்கலாம். இருப்பினும் எதிர்காலத்தில் இது போல நடக்கக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.