தீபாவளி பலகாரம் தயாரிப்பால் பச்சரிசி விற்பனை அதிகரிப்பு
தீபாவளி பலகாரம் தயாரிப்பால் பச்சரிசி விற்பனை அதிகரிப்பு
ADDED : அக் 26, 2024 08:29 PM
சென்னை:தீபாவளிக்கு இனிப்பு மற்றும் கார பலகாரங்களை தயாரிக்க, பலரும் ரேஷன் கடைகளில் பச்சரிசி வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தமிழக ரேஷன் கடைகளில், அரிசி கார்டுதாரர்களுக்கு மாதம், 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது.
கார்டுதாரர் தனக்கான ஒதுக்கீட்டில் விருப்பத்திற்கு ஏற்ப பச்சரிசி, புழுங்கல் அரிசி வாங்கிக் கொள்ளலாம். சென்னை மற்றும் புறநகர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் வசிக்கும் மக்கள், பச்சரிசி சாதம் சாப்பிடுகின்றனர்.
இதனால், மேற்கண்ட மாவட்டங் களில் பச்சரிசி பயன்பாடும்; மற்ற மாவட்டங்களில் புழுங்கல் அரிசி பயன்பாடும் அதிகம் உள்ளது.
அரிசி கார்டு வைத்திருக்கும் பலர், ரேஷனில் அரிசி வாங்குவதில்லை. மற்ற பொருட்களை வாங்கி விட்டு, அரிசியை மட்டும் தங்களுக்கு வழங்கியது போல் பதிவு செய்து, எடுத்துக் கொள்ளுமாறு, கடை ஊழியர்களிடம் கூறுகின்றனர்.
தீபாவளி பண்டிகைக்காக, பலரும் வீடுகளில் அதிரசம், முறுக்கு உள்ளிட்ட பலகாரங்களை தயாரிக்க ஆயத்தமாகி வருகின்றனர். இதற்கு பச்சரிசி அவசியம் என்பதால், ரேஷனில் வாங்காதவர்கள் கூட, தற்போது பச்சரி கேட்டு வருகின்றனர்.
இதுகுறித்து, கடை ஊழியர்கள் கூறுகை யில், 'ஒரு கார்டுதாரர் தனக்கு உரிய, 20 கிலோ அரிசியில், ஐந்து கிலோவுக்கு குறைவாகவே பச்சரிசியும்; மீதி புழுங்கல் அரிசியும் வாங்குவர். தீபாவளிக்கு பலகாரம் தயாரிக்க, தற்போது, 10 கிலோ பச்சரிசி வாங்கி செல்கின்றனர்' என்றனர்.