ADDED : ஆக 12, 2011 02:08 AM

சென்னை:விலை மதிப்பு மிக்க இரண்டு சாமி சிலைகளை திருடி, வைகை ஆற்று மணலில்
பதுக்கி வைத்து விற்க முயன்ற இருவரை, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்
கைது செய்தனர்.விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே, சிலை கடத்தல்
கும்பல், நடமாட்டம் இருப்பதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய
தகவல் கிடைத்தது. பொருளாதார குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி., ராஜா உத்தரவின்
பேரில், டி.எஸ்.பி., செல்வராஜ், இன்ஸ்பெக்டர்கள் ரவி மற்றும் சுப்புராஜ்
ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.தனிப்படை போலீசார், கடத்தல்
காரர்களிடம் இருந்து சிலைகளை வாங்கும் ஏஜன்ட்டுகள் போல் வலம் வந்தனர்.
சிலைகள் கடத்தல் குறித்து தகவல் சொன்ன உளவாளி ஒருவரையும், போலீசார் உடன்
அழைத்துச் சென்றனர். அருப்புகோட்டை பழைய பஸ் நிலையம் அருகே, போலீசார்
நின்றிருந்தபோது, வெள்ளை நிற சாக்கு பைகளுடன் இருவர் பஸ்சில் ஏற முயன்றனர்.
போலீசார், இருவரையும் சுற்றிவளைத்து பிடித்தனர். அவர்கள் வைத்திருந்த
சாக்குப் பைகளில், ஒரு அடி உயரமுள்ள பழனி ஆண்டவர் உலோக சிலை மற்றும் இரண்டு
அடி உயரமுள்ள சுப்பிரமணியர் சாமி உலோக சிலைகள் இருந்தன. போலீசாரின் தீவிர
விசாரணையில், அவர்கள் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அடுத்த பணிக்கனேந்தல்
கிராமத்தைச் சேர்ந்த கண்ணதாசன், 25, பாண்டி, 43, என்பது தெரிந்தது.
சிலைகளை, சிவகங்கை மாவட்டம், மானா மதுரையில் உள்ள அன்னதான பிள்ளையார்
கோவிலில் இருந்து திருடியதை இருவரும் ஒப்புக்கொண்டனர்.இது தொடர்பாக
இருவரையும் கைது செய்த போலீசார் திருவில்லிபுத்தூர் தலைமை குற்றவியல்
கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட சிலைகளின்
மதிப்பு, 10 லட்சம் ரூபாய் என, போலீசார் தெரிவித்தனர்.

