மின் விபத்தில் பாதிக்கப்பட்டால் ஒரே நாளில் இழப்பீடு
மின் விபத்தில் பாதிக்கப்பட்டால் ஒரே நாளில் இழப்பீடு
ADDED : டிச 03, 2025 06:57 AM

சென்னை: மின் விபத்தில் சிக்கி உயிரிழப்போரின் குடும்பத்துக்கு, 10 லட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகையை, ஒரே நாளில் வழங்க நடவடிக்கை எடுக்கும்படி, தலைமை பொறியாளர்களை, மின் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னையில் தரைக்கு அடியில் கேபிள், மற்ற இடங்களில் மின் கம்பம் வாயிலாக, மின் வினியோகம் செய்யப்படுகிறது. அறுந்து விழுந்த மின் கம்பி, கேபிள் போன்றவற்றில் இருந்து வெளியேறும் மின் கசிவில் சிக்கி, மனிதர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
மின் விபத்தால் உயிரிழக்கும் நபரின் குடும்பத்துக்கு, 10 லட்சம் ரூபாயும், இரு கைகள், கால்கள், கண்களை இழந்தால், 3 லட்சம் ரூபாயும், ஒரு கை, கால், கண்ணை இழந்தால், 1.50 லட்சம் ரூபாயும் இழப்பீடு வழங்கப்படுகிறது.
இந்த இழப்பீடுகளை, மண்டல தலைமை பொறியாளரே வழங்கலாம். இருப்பினும், இழப்பீடு வழங்க தாமதம் செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன.
இதுதொடர்பாக, சென்னையில் நேற்று முன்தினம் மின் வாரிய உயரதிகாரிகள் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப் பட்டது.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மின் விபத்தில் சிக்கித்தான் உயிரிழந்தார் என்பதை உறுதி செய்ததும், விதிமுறைகளை பின்பற்றி, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க தாமதமாகிறது.
இதை தவிர்க்க, மின் விபத்தில் இறந்தது உறுதி செய்த பின், ஒரே நாளில் இழப்பீடு வழங்குமாறும், அதிகபட்சம், 48 மணி நேரத்துக்குள் இழப்பீட்டு தொகையை வழங்குமாறும் பொறியாளர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

