ADDED : மார் 05, 2026 06:37 AM

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே சிவன் கோவிலில் சாமி சிலை திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சங்கராபுரம் அடுத்த அ.பாண்டலம் கிராமத்தில் ஆதிபுரிஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, நேற்று முன்தினம் மாசி மகத்தை முன்னிட்டு சிவகாமசுந்தரி உடனுறை நடராஜர், சண்டிகேஸ்வரர் வெண்கல சிலைகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பின் கோவில் பூட்டப்பட்டது. மாலை 5:00 மணிக்கு கோவிலை திறந்தபோது 30 கிலோ எடை கொண்ட சண்டிகேஸ்வரர் சிலை மற்றும் இரு சர விளக்குகள் திருடு போனது.
பட்டப் பகலில் கோவில் பூட்டை திறந்து உள்ளே இருந்த சாமி சிலை மற்றும் சர விளக்குகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர் பிரதாப்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில் பதிவான ரேகைகளை பதிவு செய்தனர். இது குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
