சாம்சங் - சி.ஐ.டி.யு., சமாதான முயற்சியில் அரசு தரப்பு தீவிரம்
சாம்சங் - சி.ஐ.டி.யு., சமாதான முயற்சியில் அரசு தரப்பு தீவிரம்
ADDED : அக் 13, 2024 05:54 AM

சென்னை: தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவு கொண்டு வர, சாம்சங் நிறுவனம் மற்றும் சி.ஐ.டி.யு., சங்கத்தினரை சமாதானப்படுத்தும் முயற்சியில், தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து, தொழில்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சங்க அங்கீகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், அரசால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனை அதிகம் இருக்கும். வேலைக்கு வந்த தொழிலாளர்களுக்கு கூடுதல் நேரம் வேலை வழங்கி, அதற்கு ஏற்ப கூடுதல் சம்பளமும் வழங்கி, சாம்சங் நிறுவனம் விழாக்கால உற்பத்தியை முடித்து விட்டது.
வேலைநிறுத்த போராட்டம் தொடர்ந்தால், அதில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு தான் சம்பள இழப்பு ஏற்படும். அவர்களின் குடும்பத்தினருக்கும் பாதிப்பு உருவாகும்.
எனவே, போராட்டத்தை கைவிட்டு பணிக்கு வருமாறு தொழிலாளர்களை அறிவுறுத்துமாறு, சி.ஐ.டி.யு., தரப்பினருடன் பேச்சு நடத்தப்படுகிறது. தொழிலாளர்கள் நலனை பாதுகாக்கும் வகையில், 'தொழிலாளர்களின் பணி பாதுகாப்புக்கு சங்கம் அவசியம். தொழிலாளர்களின் கோரிக்கையை முழுதுமாக புறக்கணிக்க முடியாது' என்று, சாம்சங் அதிகாரிகளுடனும் பேச்சு நடத்தப்படுகிறது. போராட்டத்தை கைவிட தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.