சி.ஐ.டி.யு., போராட்டம்: மாநில அரசின் தலையீட்டை எதிர்பார்க்கும் சாம்சங்
சி.ஐ.டி.யு., போராட்டம்: மாநில அரசின் தலையீட்டை எதிர்பார்க்கும் சாம்சங்
ADDED : பிப் 20, 2025 07:41 PM

சென்னை: தங்களது நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்புக்கும், எளிதாக தொழில் செய்யவும் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாம்சங் நிறுவனம் கூறியுள்ளது.
ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் சாம்சங் இந்தியா நிறுவன ஊழியர்கள், 'சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம்' என்ற பெயரில் சங்கம் ஏற்படுத்தினர். மார்க்சிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமான சி.ஐ.டி.யு., இணைவு பெற்றதாக இந்த சங்கம் செயல்பட்டது.ஆனால், இந்த தொழிற்சங்கத்தை சாம்சங் நிறுவனம் ஏற்க மறுத்தது. இது தொடர்பாக 37 நாட்கள் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு தரப்பு பலமுறை தலையிட்டு பேச்சு நடத்திய பிறகு தான் தீர்வு ஏற்பட்டது. போராட்டம் முடிவுக்கு வந்து தொழிலாளர்கள் அனைவரும் பணிக்கு திரும்பிய நிலையில், தொழிற்சங்க நிர்வாகிகளாக செயல்பட்ட மூவரை சாம்சங் இந்தியா நிறுவனம் சஸ்பெண்ட் செய்தது.
நிறுவன விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதை திரும்பப் பெற வலியுறுத்தி சக ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக சாம்சங் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: குறிப்பிட்ட சில தொழிலாளர்கள், இன்று மீண்டும் சட்டவிரோதமாக தொழிற்சாலையில் பணிக்கும், அமைதிக்கும் இடையூறு ஏற்படுத்த முயற்சி செய்தனர். அனைத்து தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பான பணியிடத்தை உருவாக்குவதில் உறுதி பூண்டுள்ளோம். தொழில்துறை ஸ்திரத்தன்மை மற்றும் பணியிடத்தில் அமைதியை சீர்குலைக்கும் தொழிலாளர்களின் எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கைகளை பொறுத்துக் கொள்ள முடியாது.
நிறுவனத்தின் விதிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். அதனை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தொழிற்சாலை பணிகள் எதுவும் பாதிக்கப்படவில்லை. தொழிலாளர்கள் பாதுகாப்புக்கும், எளிதாக தொழில் செய்யவும் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

