ADDED : அக் 11, 2024 06:19 AM

ஸ்ரீபெரும்புதுார் : சாம்சங் தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் 625 பேர் மீது, அனுமதியின்றி கூடுவது, அரசு அதிகாரிகளின் உத்தரவை மீறுவது உள்ளிட்ட, இரண்டு பிரிவுகளின் கீழ், போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கும் சாம்சங் தொழிற்சாலையில், தொழிலாளர்களில் ஒரு பகுதியினர், சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம் அளித்தல் உள்ளிட்ட, ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்டம்பர், 9ம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏழு கட்டம்
போராட்டத்தை கைவிட, தொழிற்சாலை நிர்வாகம் மற்றும் அரசு தரப்பில், ஏழு கட்டமாக பேச்சு நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து, அமைச்சர்கள் அன்பரசன், ராஜா, கணேசன் அடங்கிய குழு, வேலை நிறுத்தத்தை முடிவிக்கு கொண்டு வர, 10 மணி நேரம் பேச்சு நடத்தியது. அதில், தொழிலாளர்கள் வசதிக்காக, 108 'ஏசி' பஸ்கள் இயக்கவும், ஊதியத்தை, 5,000 ரூபாய் உயர்த்தவும் தொழிற்சாலை நிர்வாகம் சம்மதித்தது.
ஆனால், சி.ஐ.டி.யு., சங்கத்திற்கு அங்கீகாரம் வழங்க மறுப்பு தெரிவித்தது. அதனால், சி.ஐ.டி.யு., சங்கத்திற்கு அங்கீகாரம் அளிக்கும் வரை போராட்டம் தொடரும் என்று, தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.
இரண்டு பிரிவு
இதையடுத்து, நேற்று முன்தினம் காலை போராட்டம் நடத்திய, சி.ஐ.டி.யு., மாநில தலைவர் சவுந்தரராஜன், சாம்சங் சி.ஐ.டி.யு., தலைவர் முத்துகுமார் உட்பட, 616 பேரை போலீசார் கைது செய்தனர்; இரவு விடுவித்தனர். மேலும், சி.ஐ.டி.யு., மாநில தலைவர் சவுந்தரராஜன், சாம்சங் சி.ஐ.டி.யு., தலைவர் முத்துகுமார் உட்பட 625 பேர் மீது, அனுமதியின்றி கூடுதல், அரசு அதிகாரிகளின் உத்தரவை மீறியது உள்ளிட்ட, இரண்டு பிரிவுகளின் கீழ் சுங்குவார்சத்திரம் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று காலை வழக்கம் போல போராட்டத்திற்கு வந்த தொழிலாளர்களை, சுங்குவார்சத்திரம் மற்றும் குன்னம் பகுதிகளில் போலீசார் தடுத்து நிறுத்தி, 20க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
நேற்று காலை, வழக்கம் போல போராட்டத்தில் ஈடுபட வந்த சி.ஐ.டி.யு., மாநில தலைவர் சவுந்தரராஜன், சாம்சங் சி.ஐ.டி.யு., தலைவர் முத்துகுமார் உட்பட 34 பேரை, சுங்குவார்சத்திரம் பை-பாஸ் அருகே போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பின், அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்து, இரவு விடுவித்தனர்.

