sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மதுரையில் பா.ஜ., நிர்வாகி கொலை

/

மதுரையில் பா.ஜ., நிர்வாகி கொலை

மதுரையில் பா.ஜ., நிர்வாகி கொலை

மதுரையில் பா.ஜ., நிர்வாகி கொலை


UPDATED : பிப் 15, 2024 08:44 AM

ADDED : பிப் 15, 2024 07:40 AM

Google News

UPDATED : பிப் 15, 2024 08:44 AM ADDED : பிப் 15, 2024 07:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரையில் பா.ஜ., நிர்வாகி வெட்டி கொலை செய்யப்பட்டார். பா.ஜ., ஓபிசி பிரிவு மாவட்ட செயலாளர் சக்திவேல் 40. அண்ணாநகரை சேர்ந்த இவர் வண்ணடியூரில் உள்ள மாவுமில்லுக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற போது விரட்டி வந்த ஒரு கும்பல் அரிவாளால் வெட்டி சாய்த்தது. சம்பந்தப்பட்ட கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.



சென்னை: சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரத்தில், சென்னையில் உள்ள மணல் ஒப்பந்ததாரர் வீடு மற்றும் உறவினர் வீட்டில், அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.

தமிழக நீர்வளத் துறை சார்பில், 'ஆன்லைன்' வாயிலாக நடக்கும் ஆற்று மணல் விற்பனையில், பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக அமலாக்கத் துறைக்கு புகார் வந்தது.

இதையடுத்து, புதுக்கோட்டை, திண்டுக்கல், சென்னை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில், எட்டு மணல் குவாரிகள் உட்பட 34 இடங்களில், அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்தாண்டு செப்., 12ம் தேதி சோதனை நடத்தினர்.

மணல் தொழிலதிபர்கள் திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன் ஆகியோரின் உறவினர்கள் மற்றும் நெருக்கமானவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.

மணல் ஒப்பந்ததாரர் கரிகாலன், ஆடிட்டர் சண்முகராஜ் ஆகியோரது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டதில், முக்கிய ஆவணங்கள் சிக்கின.

அந்த வகையில், 12.82 கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்கள், கணக்கில் வராத பணம் 2.33 கோடி ரூபாய், 56.86 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் பறிமுதல்செய்யப்பட்டன.

இது தொடர்பாக, அமலாக்கத் துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.

ரத்தினம், ராமச்சந்திரன், கரிகாலன் ஆகியோர், தங்களது கூட்டாளிகளுடன் இணைந்து, பினாமி பெயரில் நிறுவனங்கள் துவங்கி, அவற்றின் வாயிலாக சட்ட விரோதமாக மணல் அள்ளியது விசாரணையில் கண்டறியப்பட்டது.

இதனால், அனைத்து மணல் குவாரிகளிலும், அமலாக்கத் துறை விரிவான ஆய்வை நடத்தியது.

இந்த ஆய்வில், மாநில அரசின் பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்ட மணல் அளவை காட்டிலும், அதிகப்படியான மணல் அள்ளப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

அதன்பின், மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட, 128.34 கோடி ரூபாய் மதிப்பிலான 209 இயந்திரங்கள் மற்றும் ரத்தினம், ராமச்சந்திரன், கரிகாலன் ஆகியோரின் 35 வங்கி கணக்குகளில் இருந்து, 2.25 கோடி ரூபாய் ஆகியவற்றை, அமலாக்கத் துறை கடந்த 2ம் தேதி தற்காலிகமாக முடக்கியது.

இதற்கிடையே, சென்னை சி.ஐ.டி., நகரில் உள்ள மணல் ஒப்பந்தாரர் கரிகாலன் வீடு, அடையாறில் உள்ள அவரது உறவினர் அருண் வீடு ஆகியவற்றில், அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று பிற்பகலில் சோதனையில் ஈடுபட்டனர்.

முந்தைய சோதனைகளில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், இச்சோதனை நடந்ததாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வயதான தம்பதியை தாக்கி கொள்ளையடித்த கும்பல்

லால்குடி: திருச்சி மாவட்டம், லால்குடி அருகே, ஒரத்துார் வடக்குப்பட்டி தோட்டத்தில், கணேசன், 72, அவரது மனைவி தைலம்மை, 65, வசிக்கின்றனர். இந்த தம்பதியின் மூன்று மகன்களும் திருமணமாகி, ஊருக்குள் தனித்தனியே வசிக்கின்றனர். நேற்று அதிகாலை, வயதான தம்பதி இருவரும் வீட்டுக்கு வெளியே துாங்கிக் கொண்டிருந்தனர்.

அதிகாலை 2:30 மணிக்கு தோட்டத்து வீட்டுக்குள் நுழைந்த நான்கு பேர், துாங்கிக் கொண்டிருந்த தம்பதியை தாக்கி, கட்டிப்போட்டு, வீட்டுக்குள் இருந்த 3 சவரன் தங்க நகை மற்றும் வெள்ளி நகைகள், 15,000 ரூபாயை கொள்ளையடித்து தப்பினர்.

நேற்று காலையில் தோட்டத்துக்கு சென்றவர்கள், காயமடைந்து மயங்கிக் கிடந்த வயதான தம்பதியை மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற கல்லக்குடி போலீசார், மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

டாக்டர், இன்ஜினியரிடம் ரூ.2.44 கோடி சுருட்டல்

திருப்பூர்: திருப்பூரைச் சேர்ந்தவர், 44 வயது பெண் டாக்டர். இவரது கணவரும் டாக்டர். பெண் டாக்டர் சமீபத்தில் சமூக வலைதளப் பக்கத்தில், பங்கு வர்த்தகம் தொடர்பான சில விளம்பரங்களை பார்த்தார். குறைந்த முதலீடுக்கு, அதிக லாபம் கிடைக்கும் என அதில் தகவல் இடம் பெற்றிருந்தது.

டாக்டர், அந்த 'லிங்க்' உள்ளே சென்று, அதில் கேட்டிருந்த தகவல்களை பதிவு செய்து இணைத்துக் கொண்டார். அந்த பெண் டாக்டரை, 'வாட்ஸாப்' குழுவில் இணைத்தனர். பல கட்டங்களாக பணத்தை முதலீடு செய்தார். முதலீட்டைக் காட்டிலும் அதிக லாபம் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டது.

லாப பணத்தை எடுக்க முயன்ற போது, சில வரிகளை கட்ட வேண்டும் என கூறி, மேலும் தொகையை முதலீடு செய்ய வைத்து, 1.73 கோடி ரூபாயை சுருட்டினர். பின் தான், இது மோசடி கும்பலால் நடத்தப்பட்ட செயலி என்பது தெரிந்தது.

அதுபோல, திருப்பூரைச் சேர்ந்த, 70 வயது ஓய்வுபெற்ற இன்ஜினியர் ஒருவரும் இதே போன்ற செயலியில், ஓய்வு தொகை, சேமிப்பு பணம் என, 71 லட்சம் ரூபாயை முதலீடு செய்தார். மோசடி கும்பல் பணத்தை சுருட்டியது.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வரும் திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:

விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், படிக்காதவர்களைவிட படித்தவர்களே ஏமாறுவது வேதனையான ஒன்று. பேராசையால் நீண்ட கால சேமிப்பை இழக்கும் நிலை நேரிடுகிறது.

இரு மோசடி வழக்கிலும், ஆரம்பத்தில் முதலீடு செய்யும் சிறிய தொகைக்கு அதிக லாபம் வருவதை போன்று நம்மை நம்ப வைத்து, பணத்தை எடுக்க முடியாத வகையில், மேலும் முதலீடு செய்ய வைத்து கைவரிசை காட்டியுள்ளனர்.

இரு வழக்கிலும், பல்வேறு மாநிலங்களில் உள்ள, 10க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளுக்கு பணம் மாற்றப்பட்டு, அதிலிருந்து 'கிரிப்டோ கரன்சி'யாக்கி, பணத்தை சுருட்டியுள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

குழந்தை ஆபாசமாக சித்தரிப்பு பீஹார் வாலிபர் கைது

திருப்பூர்: திருப்பூரை சேர்ந்த, 30 வயது வாலிபர், பனியன் நிறுவனத்தில் பணிபுரிகிறார். கடன் செயலி ஒன்றில் இரு ஆண்டுகள் முன், 3,000 ரூபாய் கடன் பெற்றார். தொகை செலுத்த தாமதமானது; வட்டியுடன் பணத்தை செலுத்தினார்.

ஆனால், கூடுதலாக பணத்தை செலுத்துமாறு கூறி மிரட்டினர். பணம் செலுத்த மறுக்கவே, வாலிபரின் போட்டோ மற்றும் இவரது நண்பரின் மூன்றரை வயது பெண் குழந்தையின் போட்டோவை இணைத்து, ஆபாசமாக சித்தரித்து 'வாட்சாப்'பில் அனுப்பி மிரட்டினார்.

குழந்தையின் பெற்றோர் அளித்த புகாரின் படி, திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசார், கடந்த 2022 ஆக., மாதம் வழக்குப்பதிவு செய்தனர்.

குழந்தை போட்டோவை ஆபாசமாக சித்தரித்து அனுப்பியவரை பிடிக்க கடந்த ஒன்றரை ஆண்டாக தனிப்படையினர் விசாரித்து வந்தனர்.

அவர், பீஹார் மாநிலத்தை சேர்ந்த ரோஷன்குமார், 22, என்பது தெரிந்தது. அவரை பிடிக்க தனிப்படையினர் பீஹார் சென்றபோது, அவர் ஹரியானா தப்பி சென்றார். தொடர்ந்து அவரை கண்காணித்து கைது செய்தனர்.

ஆபாச படம் பார்த்ததாக மிரட்டி வாலிபரிடம் ரூ.42,000 பறிப்பு

கோவை:கோவை தாமஸ் வீதியை சேர்ந்தவர் லாலா ராம், 26, நகை பட்டறையில் தொழிலாளி. டிசம்பர் மாதம் இவரது மொபைல் போனுக்கு வந்த ஒரு அழைப்பில் பேசிய நபர், 'சைபர் கிரைம்' போலீஸ் ஸ்டேஷனிலிருந்து பேசுவதாக கூறினார். பின், 'உங்கள் மொபைல் போனில் இருந்து அதிக ஆபாச வீடியோக்களை பார்த்துள்ளதால், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது' என கூறினார்.

புகாரை முடித்து வைக்க, 25,000 ரூபாயை அபராதமாக செலுத்த வேண்டும் எனவும் கூறினார். அந்த மர்ம நபர் பேசி கொண்டிருக்கும் போது, அருகில் போலீஸ் 'வாக்கி டாக்கி' கருவியின் சத்தம் கேட்டுள்ளது. அதனால் நிஜமான போலீஸ் பேசுவதாக நம்பிய லாலா ராம், ஆபாச படங்கள் பார்த்ததை மறுத்தார். சில நாட்களுக்கு பின், மொபைல் கோர்ட் நீதிபதி என கூறி ஒருவர் பேசி, பணம் கேட்டு மிரட்டினார்.

பயந்து போன லாலா ராம், அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு 42,000 ரூபாயை அனுப்பி வைத்தார். அதன் பின் தான், ஏமாற்றப்பட்டதை உணர்ந்த லாலா ராம், சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

ஏட்டு மனைவியை பலாத்காரம் செய்ய முயன்ற போலீஸ் கைது

பெரம்பலுார்:பெரம்பலுார் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் ஏட்டாக பணியாற்றுபவர் சதீஸ்குமார், 30, ஆயுதப்படை குடியிருப்பில் பிளாக் எண் 12ல் குடும்பத்துடன் வசிக்கிறார்.

இவரது மனைவி பிருந்தா, 24, இவர், கடந்த 12ம் தேதி இரவு 9:15 மணிக்கு, வீட்டிற்கு வெளியே மொபைல் போனில் பேசி கொண்டிருந்தார். அப்போது, குடி போதையில் அங்கு வந்த ஆயுதப்படை போலீஸ்காரர் பிரபாகரன், 31, என்பவர், பிருந்தா வாயை பொத்தி, பலாத்காரம் செய்யும் நோக்கத்துடன் துாக்கிச் செல்ல முயன்றார்.

அதிர்ச்சி அடைந்த அந்த பெண், பிரபாகரனை தள்ளிவிட்டு வீட்டிற்குள் சென்று கதவை பூட்டி, தன் கணவருக்கு தகவல் தெரிவித்தார். பின், பெரம்பலுார் போலீசில் பிருந்தா புகார் கொடுத்தார். வழக்குப் பதிவு செய்த இன்ஸ்பெக்டர் கருணாகரன், பிரபாகரனை கைது செய்து, பெரம்பலுார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தார்.

போலீஸ் ஏட்டு மனைவியை, குடி போதையில் சக போலீஸ் ஒருவரே பலாத்காரம் செய்ய முயற்சித்தது, போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.

தந்தையை தேடி வந்தபோது சிறுமிக்கு பாலியல் சீண்டல் தந்தை, மகனுக்கு '3 ஆண்டு'

புதுச்சேரி: புதுச்சேரி ரெயின்போ நகரைச் சேர்ந்தவர் வெங்கடாசலம், 58, ஹோட்டல் உரிமையாளர். இவரது மகன் ரக் ஷன், 22, பொறியாளர். இவருக்கும் கோரிமேட்டை சேர்ந்த ஒருவருக்கும் தொழில் ரீதியாக முன்விரோதம் இருந்தது.

கடந்த 2020ம் ஆண்டு வெங்கடாசலம், ரக் ஷன் ஆகியோர் கோரிமேட்டில் இருந்த அந்த நபரின் வீட்டிற்கு சென்றனர். அங்கு, அவரது 15 வயது மகள், வீட்டில் படித்துக் கொண்டிருந்தார்.

அவரிடம், தந்தை குறித்து கேட்டனர். அவர் இங்கு இல்லை என கூறியதை பொருட்படுத்தாமல் தேடினர். தந்தை இல்லாததால், சிறுமியை தாக்கி, பாலியல் சீண்டலில் ஈடுபட்டனர்.

புகாரின்படி, வெங்கடாசலம், ரக் ஷன் ஆகியோரை கைது செய்த கோரிமேடு போலீசார், அவர்கள் மீது புதுச்சேரி போக்சோ விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி ஷோபனா தேவி, குற்றம் சாட்டப்பட்ட வெங்கடாசலம், ரக் ஷனுக்கு தலா, 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, அரசு சார்பில் 1 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார்.

மாணவியிடம் அத்துமீறல் ஆசிரியருக்கு வலை



தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் அருகே குறிச்சியைச் சேர்ந்தவர் தமிழரசன், 37. இவர் அப்பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆங்கில பாட ஆசிரியர். அதே பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியை, 6ம் தேதியில் இருந்து பாலியல் சீண்டல் செய்து வந்ததாக மாணவி நேற்று முன்தினம் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின்படி, திருப்பனந்தாள் போலீசார், ஆசிரியர் தமிழரசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, தலைமறைவான அவரை தேடி வருகின்றனர். சட்டசபை கூட்டத் தொடர் நடந்து வருவதால், பாதிக்கப்பட்ட தரப்பிலும், பள்ளியில் ஆசிரியர்களிடமும் இது தொடர்பாக வெளியில் கூறக்கூடாது என, கல்வித்துறை துறை சார்பில் வாய்மொழியாக உத்தரவு பிறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பழவேற்காட்டில் அரியவகை வாத்துகள் வேட்டை: வனத்துறை விசாரணை



சென்னை: திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதியில் வலசை வரும் பறவைகளில் குறிப்பிட்ட சில வகை வாத்துகள், கொத்து கொத்தாக மயங்கி விழுந்து இறந்ததாக வந்த தகவல் அடிப்படையில் வனத்துறை அதிகாரிகள் விசாரணையில் இறங்கி உள்ளனர்.

தமிழகத்துக்கு வலசை வரும் பெரும்பாலான அரிய வகை பறவைகள், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பழவேற்காடு ஏரியில் முகாமிடுகின்றன. பூநாரைகள், ஊசிவால் வாத்துகள் என ஆயிரக்கணக்கான பறவைகள் இங்கு முகாமிடுவது வழக்கம்.

இதனால், பழவேற்காடு ஏரி பாதுகாக்கப்பட்ட பறவைகள் சரணாலயமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு பறவைகள் வேட்டையாடப்படுவதை தடுக்க வனத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், பழவேற்காட்டில், அண்ணாமலைச்சேரி உள்ளிட்ட சில பகுதிகளில், வலசை வரும் காட்டு வாத்துகள் கொத்து கொத்தாக நேற்று மயங்கி விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது.

இவற்றை அக்கம் பக்கத்து மக்கள், வீட்டுக்கு எடுத்து செல்வதாகவும் தகவல் பரவியது.

பறவைகளை வேட்டையாடும் நபர்கள் ரசாயனங்களை தண்ணீரில் கலந்ததால் வாத்துகள் மயங்கி விழுந்து இறந்ததா என்ற கேள்வியும் எழுந்துஉள்ளது.

இதன் அடிப்படையில், அங்கு விரைந்த வனத்துறை அதிகாரிகள் இறந்த வாத்துகளையும், தண்ணீர் மாதிரிகளையும் ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.

இந்திய நிகழ்வுகள்

கேரள பள்ளியில் நள்ளிரவு பூஜை: விசாரணைக்கு கல்வித்துறை உத்தரவு

கோழிக்கோடு: கேரளாவில் அரசு நிதியுதவி பெறும் பள்ளியில், நடத்தப்பட்ட நள்ளிரவு பூஜை தொடர்பாக விசாரணை நடத்த கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூ.,வைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.

இங்குள்ள கோழிக்கோடு மாவட்டத்தின் குட்டியாடி பகுதியில் உள்ள நெடுமன்னுார் அரசு நிதியுதவி பெறும் பள்ளியில், கடந்த 12ம் தேதி நள்ளிரவில் ஹோமம் வளர்த்து பூஜை நடத்தப்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது.

அந்த வீடியோவில், சாமியார் ஒருவர் ஹோமம் வளர்த்து சிறப்பு பூஜை நடத்துகிறார். அதைச் சுற்றி சிலர் நின்று வழிபடும் காட்சி இடம்பெற்றுள்ளது.

தொடர்ந்து பள்ளியில் நள்ளிரவு பூஜை நடத்தப்பட்டதை கண்டித்து இந்திய மாணவர் கூட்டமைப்பு, இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு ஆகியவை போராட்டம் நடத்தின.

இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்யப்படவில்லை என, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த பூஜை நடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக கல்வித்துறை இயக்குனர் விசாரணை நடத்தி உடனடியாக அறிக்கை தாக்கல் செய்யய கல்வித்துறை அமைச்சர் வி.சிவன் குட்டி உத்தரவிட்டுள்ளார்.

பிரபல சினிமா தயாரிப்பாளரின் பெங்களூரு மாலுக்கு 'சீல்'

பெங்களூரு: கடந்த 12 ஆண்டுகளாக வரி செலுத்தாததால், பிரபல திரைப்பட தயாரிப்பாளர், 'ராக்லைன்' வெங்கடேஷின், 'மாலு'க்கு பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் நேற்று, 'சீல்' வைத்தனர்.

Image 1232326


கன்னடம், தமிழ் உட்பட பல மொழி திரைப்படங்களின் தயாரிப்பாளர், 'ராக்லைன்' வெங்கடேஷ். தமிழில் நடிகர் ரஜினி நடித்த, லிங்கா திரைப்படத்தை தயாரித்துள்ளார். தமிழில், நாச்சியார் என்ற படத்திலும், சில கன்னட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

பெங்களூரு டி.தாசரஹள்ளியில் கடந்த 2011ல், சினிமா தியேட்டர்கள் அடங்கிய, 'மால்' ஒன்றை வெங்கடேஷ் திறந்தார். இதற்கு, மாநகராட்சிக்கு கட்ட வேண்டிய வரியை அவர் பல ஆண்டுகளாக கட்டவில்லை என்ற புகார்கள் எழுந்தன.

இது தொடர்பாக, சமீபத்தில் பெங்களூரு தெற்கு மாவட்ட பா.ஜ., தலைவர் ரமேஷ் அளித்த பேட்டியில், ''கடந்த 2021 வரை, ராக்லைன் வெங்கடேஷ், பெங்களூரு மாநகராட்சிக்கு 8.50 கோடி ரூபாய்க்கும் அதிகமான வரி பாக்கி வைத்துள்ளார்.

''இந்த மால், 48,500 சதுர அடி பரப்பளவில் மட்டுமே உள்ளது என்றும் பெங்களூரு மாநகராட்சிக்கு தவறாக தகவல் அளித்து உள்ளார். ஆனால், இந்த மால், 1 லட்சத்து 22 ஆயிரத்து 743 சதுர அடியில் ஆறு தளங்களாக கட்டப்பட்டு உள்ளது. இதன் மூலம், மாநகராட்சிக்கு 74,243 சதுர அடி பரப்பளவை மறைத்து, வரி ஏய்ப்பு செய்துள்ளார்' எனவும் குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், நேற்று காலை போலீசார், மாநகராட்சி மார்ஷல்களுடன் அங்கு வந்த மாநகராட்சியின் வருவாய் பிரிவு அதிகாரிகள், மாலுக்கு அதிரடியாக, 'சீல்' வைத்தனர்.

அதிகாரிகள் கூறுகையில், '2011 முதல் 2023 வரை மாநகராட்சிக்கு கட்ட வேண்டிய வரியை வெங்கடேஷ் செலுத்தவில்லை. இது தொடர்பாக பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் பதில் இல்லை. எனவே, கட்டடத்துக்கு சீல் வைத்தோம்' என்றனர்.

* தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷுக்கு சொந்த மான ராக்லைன் மால். * வரி செலுத்தாததால் 'சீல்' வைக்கப்பட்டது. இடம்: டி.தாசரஹள்ளி, பெங்களூரு.






      Dinamalar
      Follow us