துாய்மை பணி தனியாருக்கு இனி இல்லை நகராட்சி நிர்வாகத்துறை திட்டவட்டம்
துாய்மை பணி தனியாருக்கு இனி இல்லை நகராட்சி நிர்வாகத்துறை திட்டவட்டம்
UPDATED : நவ 24, 2026 08:53 PM
ADDED : நவ 24, 2026 08:46 PM
சென்னை: ‘நகராட்சிகளின் துாய்மை பணியை தனியார் நிறுவனங்கள் செய்து வந்த நிலையில், இனி அந்தந்த நகராட்சி நிர்வாகங்களே மேற்கொள்ளும்’ என, நகராட்சி நிர்வாகத்துறை தெரிவித்துள்ளது.
தமிழக நகராட்சி நிர்வாகத்தின் கீழ், 25 மாநகராட்சிகள், 148 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் உள்ளன. இதில், மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் துாய்மை பணிகள், தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்டன. தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் துாய்மை பணியாளர்களுக்கு, அரசு நிர்ணயித்த ஊதியம் வழங்கப்படுவதில்லை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் எழுந்தன. அத்துடன், காப்பீடு, வருங்கால வைப்பு நிதி திட்டம் போன்றவையும் கிடையாது.
இதற்கு தீர்வு காணும் வகையில், 148 நகராட்சிகளின் துாய்மை பணியை, தேசிய நகர்ப்புற வாழ்வதார இயக்கம் மற்றும் தேசிய சுகாதார திட்டத்தின் வாயிலாக, அரசே ஏற்று நடத்த உள்ளது.
இதுகுறித்து, நகராட்சி நிர்வாகத் துறை அதிகாரி கூறியதாவது:
நகராட்சிகளை பொறுத்தவரையில், நகர பகுதிகளை தாண்டி பெரிய அளவில் குப்பை தேக்கம் கிடையாது. அதனால், அந்தந்த நகராட்சிக்கு ஏற்ப, பணியாளர்களை நியமித்து, அவர்களுக்கு முறையான ஊதியம், இ.எஸ்.ஐ., – பி.எப்., போன்றவை வழங்க வேண்டும்.
ஆனால், தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் அவ்வாறு செய்வதில்லை. அரசிடம் குறிப்பிட்ட தொகையை பெற்று, பணியாளர்களுக்கு குறைந்த அளவில் ஊதியம் வழங்குகின்றன. இதற்கு தீர்வு காணும் வகையில், தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ், துாய்மை பணியாளர்கள் கொண்டு வரப்படுகின்றனர்.
இத்திட்டங்களின் கீழ், ஒப்பந்த அடிப்படையில் துாய்மை பணியாளர்களுக்கு, நகராட்சிகளின் வகைக்கு ஏற்ப ஊதியம், நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும். இது, அரசு பணி கிடையாது. மத்திய அரசின் திட்டங்களின் கீழ் பணியாற்றுவதால், பணி பாதுகாப்பு இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
