ADDED : ஜன 18, 2024 09:13 PM

கோத்தகிரி:முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின், அவரது தோழி சசிகலா நேற்று முதல் முறையாக கோடநாடு எஸ்டேட்டிற்கு வருகை தந்தார்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கோடநாடு எஸ்டேட்டில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பங்குதாரராக உள்ள நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவு மற்றும் கோடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை சம்பவத்திற்கு பின், ஏழு ஆண்டுகளுக்கு பின் சசிகலா வருகை தந்தார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்த சசிகலா, அங்கிருந்து, சாலை மார்க்கமாக கோடநாடு எஸ்டேட்டிற்கு மாலை, 6:40 மணிக்கு வருகை தந்தார்.கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜ் தலைமையில், எஸ்டேட் தொழிற்சாலை ஊழியர்கள் காத்திருந்து மேள தாளத்துடன் வரவேற்பு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளிடம் சசிகலா தெரிவிக்கையில், கோநாடு கொள்ளை, கொலை வழக்கில், நல்ல மனிதரான அப்பாவி காவலாளி கொலை செய்யப்பட்டது, மிகவும் வருத்தத்தம் அளிக்கிறது. இதில், யார் ஈடுபட்டிருந்தாலும், அவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள். உண்மையான குற்றவாளிகள் யார் என்று, அம்மா தெய்வமாக இருந்து நிச்சயமாக தண்டனை வாங்கி கொடுப்பார். அ.தி.மு.க, ஒன்று படுவதற்கு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறேன். அரசியலில் விட்டுக் கொடுப்பது என்பது மிகவும் முக்கியமான ஒன்று. ஆனால், இதை யாரும் செய்வதில்லை. முன்னாள் முதல்வருக்கு பூஜை செய்ய வந்துள்ளேன். சிலை அமைப்பது குறித்து, பிறகு தெரிவிப்பேன்' என தெரிவித்தார்.அப்போது, ஜெயலலிதாவை நினைத்து கண்ணீர் சிந்தினார்.
தொடர்ந்து எஸ்டேட்டிற்குள் சென்ற சசிகலா அங்கு தங்கி, நாளை காலை (இன்று) சிலை அமைக்கப்பட உள்ள இடத்தில் பூஜையில் பங்கேற்கிறார்.