இலங்கை மீனவர்களை துாண்டிவிட்ட சசிகாந்த் செந்தில்: ராதாகிருஷ்ணன் பகீர்
இலங்கை மீனவர்களை துாண்டிவிட்ட சசிகாந்த் செந்தில்: ராதாகிருஷ்ணன் பகீர்
ADDED : செப் 02, 2025 01:34 AM
சென்னை: காங்கிரஸ் எம்.பி., சசிகாந்த் செந்தில் இலங்கைக்கு சென்று, அங்குள்ள தமிழ் மீனவர்களை இந்திய மீனவர்களுக்கு எதிராக துாண்டி விட்டதாக, தமிழக பா.ஜ., பிரமுகர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழக காங்கிரஸ் எம்.பி., சசிகாந்த் செந்தில், கர்நாடகாவில் உள்ள தர்மசாலாவில் பிரச்னையை கிளப்பினார். அது, வேறொரு திசை நோக்கி போகிறது. தற்போது, மத்திய அரசு கல்வி நிதியை ஒதுக்கவில்லை என உண்ணாவிரதம் இருந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இப்படி வம்படியாக எதையாவது செய்வதில் தேர்ந்த அரசியல்வாதியாக இருக்கும் அவர், இலங்கையில் உள்ள ஈழப் பகுதிக்கு சென்றுள்ளார். அங்குள்ள தமிழ் மீனவர்களை, இந்திய மீனவர்களுக்கு எதிராக திசை திருப்பி, இரு நாடுகளுக்கு இடையே பிரச்னை வர வேண்டும் என, ஏதாவது பேசி துாண்டி விட்டதாக கூறுகின்றனர்.
அவருக்கு பின், தி.மு.க., ராஜ்யசபா எம்.பி.,க்கள் அங்கு சென்று, மீனவர்களுடன் பேசி விட்டு வந்ததாகவும் தகவல் இருக்கிறது. 'ஏதாவது ஒரு பிரச்னையை துவக்குங்கள்; அதனால் என்ன பிரச்னை வந்தாலும் அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்' என உத்தரவாதம் சொல்லிவிட்டு வந்துள்ளனர். பிரச்னைகளை பார்த்துக் கொள்வதற்கு, இவர்களெல்லாம் என்ன சர்வதேச வழக்கறிஞர்களா?
இலங்கை, இந்திய மீனவர்களுக்கு இடையே ஏழாம் பொருத்தமாக இருக்கும் சூழ்நிலையில், இப்படியெல்லாம் பிரச்னையை கிளப்பிவிடும் வகையில் பேசினால், அது தான் நல்லெண்ணமா? இரு நாட்டு மீனவர்களிடையே சமாதானம் பேசி, இருக்கும் பிரச்னைகளை சுமுகமாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் கொண்ட தி.மு.க., காங்கிரஸ் எம்.பி.,க்கள், அதற்கு மாறாக இலங்கையில் உள்ள தமிழ் மீனவர்களை துாண்டி விடுவது என்பது சரியான அணுகுமுறை அல்ல. இவர்கள் நடந்து கொண்ட விதத்தை ஈழத்தில் பரபரப்பாக பேசுகின்றனர்.
இப்படிப்பட்டவர்கள் எம்.பி.,க்களாக இருந்தால், இரு நாட்டு மீனவர்களின் உறவு எப்படி மேம்படும்?
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
***

