தமிழ் வளர்ச்சிக்கு அரசின் நடவடிக்கையில் திருப்தி: சென்னை ஐகோர்ட்
தமிழ் வளர்ச்சிக்கு அரசின் நடவடிக்கையில் திருப்தி: சென்னை ஐகோர்ட்
ADDED : பிப் 15, 2024 01:31 PM

சென்னை: தமிழ் வளர்ச்சிக்கு தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கை திருப்தியளிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
உலக தமிழ் ஆராய்ச்சி அறக்கட்டளைத் தலைவர் கனகராஜ், 'தமிழ் மொழி மேம்பாடு குறித்து ஆய்வுகள் நடத்த அறிஞர் குழுவை அமைக்க வேண்டும். தமிழக அரசு அரசாணையை தமிழில் வெளியிட வேண்டும்' எனக் குறிப்பிட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று (பிப்.,15) விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு தரப்பில், ''தமிழ் ஆராய்ச்சிக்காக உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தால் 2013ல் ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டது. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. கீழமை நீதிமன்றங்களில் சாட்சியங்களை தமிழில் பதிவு செய்ய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது'' என வாதிடப்பட்டது.
தமிழக அரசின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், 'தமிழ் வளர்ச்சிக்கு தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கை திருப்தியளிக்கிறது. தமிழ் வளர்ச்சிக்காக எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை' எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

