காவல் முடிந்து மீண்டும் ஜெயிலுக்குள் தள்ளப்பட்டார் சக்சேனா
காவல் முடிந்து மீண்டும் ஜெயிலுக்குள் தள்ளப்பட்டார் சக்சேனா
ADDED : ஜூலை 27, 2011 06:33 PM
சென்னை: 'சிந்தனை செய்' படத்திற்கு, கிராபிக்ஸ் தயார் செய்தவரை மிரட்டிய சக்சேனா, இரண்டு நாள் போலீஸ் காவல் முடிந்து, மீண்டும் ஜெயிலுக்குள் தள்ளப்பட்டார்.சென்னை, விருகம்பாக்கம் அடுத்த ஆழ்வார் திருநகரைச் சேர்ந்தவர் அருள் மூர்த்தி; நுங்கம்பாக்கத்தில், 'டிஜிட்டல் மேஜிக் விஷன்' என்ற பெயரில், திரைப்படங்களுக்கு கிராபிக்ஸ் பணிகள் செய்து கொடுத்து வந்தார்.
சினிமா தயாரிப்பாளர் அம்மா ராஜசேகர், 'சிந்தனை செய்' என்ற படத்தை, தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாரித்து, சன், 'பிக்சர்ஸ்' நிறுவனத்திற்கு விற்பனை செய்தார். இந்த படத்திற்கான கிராபிக்ஸ் பணிகளுக்கு, அருள்மூர்த்தியிடம், 22 லட்ச ரூபாய் வழங்குவதாக கூறப்பட்டது. பல தவணைகளாக, 11 லட்ச ரூபாய் தரப்பட்டது. கிராபிக்ஸ் பணிகள் முடிந்த நிலையில், மீதமுள்ள, 11 லட்ச ரூபாயை, அருள் மூர்த்தி கேட்டுள்ளார். பிலிமுடன், நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரிவியூ தியேட்டருக்கு அருள் மூர்த்தியை வரவழைத்து, அம்மா ராஜசேகர், சன், 'பிக்சர்ஸ்' ஹன்ஸ்ராஜ் சக்சேனா, ஐயப்பன் உள்ளிட்டவர்கள், கொலை மிரட்டல் விடுத்தனர். நடந்த சம்பவம் குறித்து, நுங்கம்பாக்கம் போலீசில் அருள் மூர்த்தி புகார் அளித்தார். வழக்கு பதியப்பட்டு, அம்மா ராஜசேகர், சக்சேனா மற்றும் ஐயப்பனை போலீசார் கைது செய்தனர். இதில், சக்சேனா, ஐயப்பனை விசாரிக்க அனுமதி கேட்டு, கடந்த திங்களன்று, எழும்பூர் கோர்ட்டில், நுங்கம்பாக்கம் போலீசார் மனு தாக்கல் செய்தனர். இரண்டு நாட்கள், அதாவது, புதன் கிழமை காலை 10 மணிக்கு, மீண்டும் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என, மாஜிஸ்திரேட், கீதாராணி உத்தரவிட்டார். இருவரையும் காவலில் எடுத்த போலீசார், விசாரணை நடத்தினர். அப்போது, போலீசார் கேள்விகளுக்கு இருவரும், தங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று பதிலளித்ததாக கூறப்படுகிறது. கோர்ட் அனுமதியளித்த நேரம் முடிந்த நிலையில், பகல் 12:30 மணிக்கு, எழும்பூர் கோர்ட்டில் இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.அப்போது, இருவரையும் மீண்டும் ஜெயிலில் அடைக்கும்படி மாஜிஸ்திரேட் உத்தரவிட்டதையடுத்து, இருவரும் புழல் ஜெயிலுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
தந்தையை விரட்டிய தனயன்!சென்னை எழும்பூர் 14வது கோர்ட்டில், போலீஸ் காவல் முடிந்து சக்சேனா ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணையின் முடிவில், போலீஸ் ஜீப்பில் இருந்தபடியே தன் வழக்கறிஞர்களுடன் பேசிக் கொண்டிருந்த சக்சேனாவை, அவரது தந்தை தர்மராஜா சந்திக்கச் சென்றார்.ஆனால், சக்சேனா, 'உன்னை எல்லாம் யார் இங்கு வரச் சொன்னது? இவர்களிடம் பேச வேண்டியது நிறைய உள்ளது. நீ போ' என, விரட்டினார். தூர விலகிச் சென்று, தன் மகனை பார்த்தபடியே கண் கலங்கி நின்று கொண்டிருந்தார், சக்சேனாவின் தந்தை தர்மராஜா.