பள்ளி சத்துணவு 'மெனு'வில் மாற்றம் மாணவர்கள் விரும்பிய பருப்பு சேர்ப்பு
பள்ளி சத்துணவு 'மெனு'வில் மாற்றம் மாணவர்கள் விரும்பிய பருப்பு சேர்ப்பு
ADDED : ஜன 09, 2026 01:44 AM

சென்னை: சத்துணவு திட்டத்தின் கீழ், பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கீரை சாதம், வெஜ் பிரியாணிக்கு மாற்றாக, காய்கறி சாம்பார், கீரை சேர்க்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்தை உறுதி செய்ய, சத்துணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், பெற்றோர் மற்றும் மாணவர்களிடம் இருந்து பெறப்படும் கருத்துகளுக்கு ஏற்ப, அவ்வப்போது சிறு மாற்றங்கள் செய்யப்படுகின்றன.
அந்த வகையில், சமூக நலத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மற்றும் மதிப்பீட்டின் அடிப்படையில், முதல் மற்றும் மூன்றாம் வார உணவு பட்டியலில் மாற்றம் செய்து, அத்துறை செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முதல் மற்றும் மூன்றாம் வார மெனுவில், திங்கள் வெஜ் பிரியாணி, வெள்ளிக் கிழமை கீரை சாதம் வழங்கப்பட்டன.
இவற்றை மாணவர்கள் விரும்பவில்லை. எனவே, அவற்றுக்கு பதிலாக, மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, உணவில் பருப்பு சேர்க்கப்பட்டு உள்ளது. அதன்படி, திங்கள் கிழமை சாதம், காய்கறி சாம்பார்; வெள்ளிக் கிழமை சாதம், கீரை கூட்டு, சாம்பார் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்கள் வாயிலாக, மாணவர்களின் விருப்பம் பூர்த்தி செய்யப்படும். அவர்களுக்கு தேவையான புரதம், சத்துக்கள் கிடைக்கும் என, சமூக நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

