பள்ளி மாணவியர் தவறாக சித்தரிப்பு 'பேட் கேர்ள்' படத்திற்கு எதிராக புகார்
பள்ளி மாணவியர் தவறாக சித்தரிப்பு 'பேட் கேர்ள்' படத்திற்கு எதிராக புகார்
ADDED : பிப் 01, 2025 10:30 PM
சென்னை:பேட் கேர்ள் படத்தின், 'டீசர்' காட்சிகள் வெளியான நிலையில், அதில் பள்ளி மாணவியர் தவறாக சித்தரிக்கப்பட்டு உள்ளதாக, மதுரையை சேர்ந்த எஸ்.வெங்கடேஷ் என்பவர், சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
புகாரில் அவர் கூறியுள்ளதாவது:
பள்ளி செல்லும் மகள் மற்றும் மகனின் தந்தையான நான், 'யு டியூப்'பில் நேற்று காலை, பேட் கேர்ள் படத்தின் டீசரை பார்த்தேன். அதில், குழந்தைகளுக்கு எதிரான ஆபாச படங்கள் மற்றும் குற்றங்கள் உள்ளிட்ட சட்டங்களை மீறும் காட்சிகள் உள்ளன.
ஆபாச படங்கள்
சமூக வலைதளங்களில் இதுபோன்றவற்றை அதிகம் பகிர்வது கவலை அளிக்கிறது. இந்த விவகாரத்தில் உடனடியாக சட்ட நடவடிக்கை அவசியமாகிறது.
இப்படத்தின் டீசரில், குழந்தைகளின் ஆபாச படங்கள் இடம் பெற்றுஉள்ளன. பள்ளி மாணவ - மாணவியர் பாலியல் முறையில் சித்தரிக்கப்பட்டு உள்ளனர்.
இது, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் இந்திய சட்டங்களை மீறுவதாக உள்ளது. குழந்தைகள் மற்றும் சமூகத்தின் நல்வாழ்வுக்கு எதிராக அமைந்துள்ளது. இந்த டீசர், கூகுள் நிறுவனத்தின் யு டியூப் தளத்தில், அனைவராலும் அணுகக்கூடிய வகையில் உள்ளது.
நடவடிக்கை@@
எனவே, பேட் கேர்ள் திரைப்படத்தின் தயாரிப்பு குழு, நடிகர்கள், படக் குழுவினர் மீது, தகவல் தொழில்நுட்ப சட்டம், பாரதிய நியாய சன்ஹிதா, பணியிடத்தில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தலை தடுத்தல் உள்ளிட்ட சட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், யு டியூப்பில் இருந்து அந்த டீசர் நீக்கப்படுவதுடன், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.