ADDED : நவ 04, 2024 02:49 AM

சென்னை: தமிழக பா.ஜ., ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ராஜா அறிக்கை:
திருச்செந்துார் கோவிலில், கடந்த 6 ஆண்டுகளாக, பவுர்ணமி அன்று, கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி, கடலுக்கு ஆரத்தி எடுத்து, அனைவரும் ஒன்றாக அமர்ந்து நிலாச்சோறு சாப்பிடுகின்றனர்.
அன்று இரவு கடற்கரை மற்றும் கோவிலின் வெளியே, தங்குகின்றனர். அதிகாலை நாழிக்கிணறு மற்றும் கடலில் புனித நீராடி, முருக பெருமானை வழிபட்டு, வீடு திரும்புகின்றனர்.
ஹிந்து சமய அறநிலையத் துறை அலட்சியத்தாலும், கோவில் நிர்வாகத்தின் மெத்தனத்தாலும், பக்தர்கள் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, நல்ல கழிவறை வசதி செய்து தர வேண்டும்.
குறைந்த நேரத்தில் சாமி தரிசனம் செய்ய, அனுமதிக்க வேண்டும். தொலை துாரத்தில் இருந்து நடந்து செல்ல வற்புறுத்தக் கூடாது.
கடல் ஆரத்தியை அனுமதிக்க வேண்டும். தன்னார்வ அமைப்புகள், அன்னதானம் கொடுப்பதை அனுமதிக்க வேண்டும். இதற்கு முதல்வர் ஸ்டாலின், தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.