அப்பா என்ற சொல்லுக்கு மாண்பு உள்ளது; சீமான் பதில்
அப்பா என்ற சொல்லுக்கு மாண்பு உள்ளது; சீமான் பதில்
ADDED : பிப் 18, 2025 02:28 PM

விக்கிரவாண்டி: 'அப்பா என்ற சொல்லுக்கு மாண்பு உள்ளது. பெரிய புனிதம் உள்ளது' என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில் அளித்தார்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் குறித்து அவதூறாகப் பேசியதாக, தொடரப்பட்ட வழக்கில் விக்கிரவாண்டி கோர்ட்டில் சீமான் ஆஜரானார். பின்னர், நிருபர்கள் சந்திப்பில் சீமான் கூறியதாவது: புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் நிதியைத் தருவோம் என்பது கொடுங்கோண்மை. உரிய நிதியைத் தராவிட்டால் வரி செலுத்த முடியாது என்பதை வலியுறுத்தி தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
அதை தி.மு.க., அரசு செய்யாது. தி.மு.க., கோழைகளின் கூடாரம். நன்றாக பேசும், சண்டை செய்யாது. தாய்மொழிக் கல்விக் கொள்கையே இந்தியாவில் வாழும் அனைத்து தேசிய இனங்களுக்குமானத் தேவையும், உரிமையும் ஆகும். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுங்கள்.
எங்களுக்கான கல்வியை நாங்கள் கொடுத்துக் கொள்கிறோம். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரை ஏன் சுட்டுக் கொன்றீர்கள்? அவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலம் என்ன ? இவ்வாறு அவர் கூறினார்.
பெரிய புனிதம்
அப்பா என்று அழைக்கிறார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளாரே? என நிருபர்கள் எழுப்பி கேள்விக்கு, 'அப்பா என்றால் இப்படி பண்ணிட்டீங்களே அப்பா என்று சொல்லி இருப்பார்கள். அவரையும், அவரது கட்சிக்காரர்களையும் தவிர வேறு யாராவது ஒருவரை நல்லாட்சி நடக்கிறது என்று சொல்ல சொல்லுங்கள்.
பள்ளிக்கரணை ஏரியை ஆக்கிரமித்து அரசு குப்பை மேடாக்கி உள்ளது. அரசு ஆக்கிரமித்தால் சட்டம், அப்பாவி மக்கள் ஆக்கிரமித்தால் குற்றம். அப்பா என்ற சொல்லை தனக்கு குறியீடாக ஆக்க வேண்டும் என நினைக்கிறார்.
அப்பா என்ற சொல்லுக்கு மாண்பு உள்ளது. பெரிய புனிதம் உள்ளது. எல்லா பிள்ளைகளையும் நன்றாக படிக்க வைக்க வேண்டும். நன்றாக குடிக்க வைக்க கூடாது. இவ்வாறு சீமான் பதில் அளித்தார்.

