சீமான் கருத்து சர்ச்சைக்குரியது; தமிழகம், திராவிடம் பிரிக்க முடியாது என்கிறார் அமைச்சர் ரகுபதி
சீமான் கருத்து சர்ச்சைக்குரியது; தமிழகம், திராவிடம் பிரிக்க முடியாது என்கிறார் அமைச்சர் ரகுபதி
ADDED : அக் 21, 2024 11:41 AM

புதுக்கோட்டை: ''சீமான் கருத்து சர்ச்சைக்குரியது; தமிழகம், திராவிடம் பிரிக்க முடியாது,'' என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்தார்.
புதுக்கோட்டையில் நிருபர்கள் சந்திப்பில், ரகுபதி கூறியதாவது: அ.தி.மு.க.,வுடன் யாரும் கூட்டணியில் சேர தயாராக இல்லாததால், இ.பி.எஸ்., விரக்தியில் பேசுகிறார். தி.மு.க., கூட்டணி உடைந்துவிடும் என இ.பி.எஸ்., பகல் கனவு கண்டு வருகிறார். இது பலிக்காது. தி.மு.க., கூட்டணி எந்த சூழ்நிலையிலும் உடையாது. தமிழ்த்தாய் வாழ்த்து என்பது தமிழர்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு பாடக்கூடிய ஒன்று. சீமான் கருத்து சர்ச்சைக்குரியது; தமிழகம், திராவிடம் ஆகிய இரண்டும் இந்த தமிழ் மண்ணில் இருந்து பிரிக்க முடியாதவை.
திராவிடம்
தமிழகத்தில் உள்ள எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் சரி, அனைத்தும் திராவிடம் சார்ந்த கட்சிகள் தான். திராவிடம் சாராத எந்த கட்சிகளும் இல்லை. யாராக இருந்தாலும் கட்சியை ஆரம்பிக்கும் போது, திராவிடத்துடன் இணைந்து தான் ஆரம்பித்து இருக்கிறார்கள்.
திராவிடம் என்பது தமிழ் மண்ணில் ஊறிப்போன ஒரு சொல். இதனை தி.மு.க., முன்னெடுத்து செல்லும். ஒரு இயக்கத்தை நாங்கள் அழிக்க வேண்டிய அவசியம் கிடையாது. அந்த இயக்கத்தின் தலைமை பலவீனம் ஆகிப்போனால், அந்த இயக்கம் தானாகவே அழிந்துவிடும்.
மக்கள் கோரிக்கை
இ.பி.எஸ்.,சின் தலைமை பலவீனமாகி இருக்கிறது. அதன் எடுத்துக்காட்டு தான் இந்த புலம்பல். அ.தி.மு.க., உடன் கூட்டணி சேர யாரும் தயாராக இல்லை. நம்பிக்கை உடைய பார்ட்னராக அ.தி.மு.க.,வை ஏற்றுக்கொள்ள எந்த கட்சியும் தயாராக இல்லை.
அவர் வலைவீசி கொண்டு இருக்கிறார். ஆனால் யாரும் கூட திரும்பி பார்க்கவில்லை. இதுதான் உண்மை. சீமான் கற்பனையில் சொல்லி கொண்டு இருக்கிறார். தி.மு.க., உடன் கூட்டணியில் திருமாவளவன் உறுதியோடு இருக்கிறார். கவர்னர் ரவியை மாற்ற வேண்டும் என்பது தான் ஒட்டுமொத்த மக்களின் ஒரே கோரிக்கை. இவ்வாறு ரகுபதி கூறினார்.

