அனைத்து அமைச்சர்களுக்கும் 'சீட்'; உதயநிதியிடம் 'லிஸ்ட்' கேட்ட ஸ்டாலின்
அனைத்து அமைச்சர்களுக்கும் 'சீட்'; உதயநிதியிடம் 'லிஸ்ட்' கேட்ட ஸ்டாலின்
UPDATED : டிச 24, 2025 01:45 AM
ADDED : டிச 24, 2025 01:43 AM

சென்னை: 'அமைச்சரவையில் உள்ள அனைவருக்கும், 'சீட்' தர வேண்டும்; இளைஞரணி பட்டியலை என்னிடம் கொடுங்கள். அனைத்து வேட்பாளர்களையும் நான் தேர்வு செய்கிறேன்' என, முதல்வர் ஸ்டாலின் தரப்பில் இருந்து, துணை முதல்வர் உதயநிதியிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., மற்றும் சிறிய கட்சிகள் உட்பட, உதயசூரியன் சின்னத்தில், 160 தொகுதிகளுக்கு குறையாமல் போட்டியிட, தி.மு.க., தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.
தேர்தல் தேதி அறிவிப்புக்கு ஒரு மாதம் முன்பே, வேட்பாளர்களையும் அறிவிக்க திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக, துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்ட குடும்ப உறவினர்களிடம், ஸ்டாலின் சமீபத்தில் ஆலோசித்துள்ளார்.
அப்போது, 'மூத்த அமைச்சர்கள் சிலர் நடக்கவே சிரமப்படுகின்றனர். அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டாம்; அவர்கள் போட்டியிட்ட தொகுதிகளில், அவர்கள் பரிந்துரை செய்யும் இளைஞர்களை களமிறக்கலாம்' என, உதயநிதி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஏற்க மறுத்து ஸ்டாலின் கூறியுள்ளதாவது: மூத்த அமைச்சர்களுக்கு வயதாகி விட்டாலும், அவர்களுக்கு தேர்தல் அனுபவம் அதிகம். வெற்றி பெறுவதற்கான சூத்திரம் அறிந்தவர்கள். மூத்த அமைச்சர்கள் உட்பட, என் அமைச்சரவையில் உள்ள அனைவருக்கும் சீட் வழங்கப்பட வேண்டும்.
அவர்கள் தான் தேர்தல் செலவை ஏற்கப் போகின்றனர். அமைச்சர் போட்டியிடும் தொகுதி மட்டுமின்றி, அருகில் உள்ள ஒருசில தொகுதிக்கான செலவையும் ஏற்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளேன். அதற்கு அமைச்சர்கள் தயாராக உள்ளனர்.
அதே நேரத்தில், இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. அவர்கள் எந்த சூழலிலும் கட்சிக்கும், தலைமைக்கும் விசுவாசம் மிக்கவர்களாக இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்களையே பரிந்துரைக்க வேண்டும். எனவே, இளைஞரணியில் வாய்ப்பு தர வேண்டியோர் பட்டியலை என்னிடம் கொடுத்து விடுங்கள்; நான் தேர்வு செய்கிறேன்.
'உடன்பிறப்பே வா' நிகழ்ச்சி வாயிலாக, தொகுதி வாரியாக நிர்வாகிகளை சந்தித்து, எந்த தொகுதியில் யாரை வேட்பாளராக நிறுத்தினால், வெற்றி உறுதியாக கிடைக்கும் என்ற விபரத்தை சேகரித்துள்ளேன்.
உளவுத்துறை வாயிலாகவும் யாரை நிறுத்தலாம் என்ற பட்டியல் கிடைத்துள்ளது. அவற்றின் அடிப்படையில் சரியான நபர்களை, வேட்பாளர்களாக அறிவிக்கலாம். இது, தி.மு.க., வளர்ச்சிக்கு மட்டுமல்ல, உதயநிதிக்கும் உறுதுணையாக இருக்கும். இவ்வாறு ஸ்டாலின் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

