சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 06, 2025 01:50 AM

சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை வலியுறுத்தி, சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் சார்பில், 15 ஆண்டு கால கோரிக்கையான, 'சம வேலைக்கு சம ஊதியம்' என்பதை வலியுறுத்தி, கடந்த 1ம் தேதியில் இருந்து, இடைநிலை ஆசிரியர்கள் கருப்புப்பட்டை அணிந்து பணி செய்தனர்.
இந்நிலையில் நேற்று, சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகில் இருந்து, பல்வேறு சாலைகளின் வழியாக பேரணியாக சென்ற இடைநிலை ஆசிரியர்கள், ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, இயக்கத்தின் பொதுச்செயலர் ராபர்ட் கூறியதாவது:
தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட, 6வது ஊதியக் குழுவில், 2009, மே 31க்கு முன் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதியத்தை விட, அதே ஆண்டு, ஜூன் 1க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு, 3,170 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
அதன்பின், 2012ல், 12,000 இடைநிலை ஆசிரியர்கள் தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கும் தகுதிக்கு ஏற்ற ஊதியம் வழங்கப்படவில்லை. ஏற்கனவே இருந்த 3,170 என்ற முரண்பாடு, 7வது ஊதிய உயர்விலும் தொடர்ந்தது.
இதுகுறித்து, கடந்த 15 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம். தி.மு.க., தன் தேர்தல் அறிக்கையில் ஊதிய முரண்பாட்டை தீர்ப்பதாக வாக்குறுதி அளித்தது. ஆனால், கடந்த 2022ல், ஒன்பது நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
இதைத் தீர்க்க, மூவர் குழு அமைக்கப்பட்டது. ஆனால், இதுவரை அறிக்கை பெற்று, கோரிக்கையை நிறைவேற்றவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

