சம்பளம் பிடித்தாலும் போராட்டம் தொடரும்; இடைநிலை ஆசிரியர்கள் உறுதி
சம்பளம் பிடித்தாலும் போராட்டம் தொடரும்; இடைநிலை ஆசிரியர்கள் உறுதி
ADDED : ஜன 08, 2026 09:14 PM

கோவை: 'சம வேலைக்கு சம ஊதியம்' என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி, கோவையில் இடைநிலை ஆசிரியர்கள் மேற்கொண்டு வரும் காத்திருப்புப் போராட்டம் நீடித்து வருகிறது.
தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி, சென்னையில் கடந்த டிச.26ம் தேதி முதல் இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, ஜன. 5ம் தேதி முதல் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஆசிரியர்கள் போராட்டத்தை தொடங்கினர்.
அரசு தரப்புடன் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டவில்லை. இதனால், போராட்டத்தை தீவிரப்படுத்த ஆசிரியர்கள் முடிவெடுத்துள்ளனர். இச்சூழலில், பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்ய பள்ளிக்கல்வி துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கூறுகையில், நாங்கள் தற்போது பெற்று வரும் ஊதியமே மிகவும் குறைவு. அந்த ஊதிய முரண்பாட்டை களையவே போராடி வருகிறோம். சம்பளத்தை பிடித்தம் செய்தாலும், எங்கள் வாழ்வாதார கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட போவதில்லை.
75 சதவீதத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்கவுள்ளனர். கோரிக்கைகள் வெல்லும் வரை எங்களின் முழக்கங்கள் ஓயாது, என தெரிவித்தனர். ஆசிரியர்களின் இத்தொடர் போராட்டத்தால், மாவட்டத்தில் குறிப்பாக ஈராசிரியர் பள்ளிகளில் கற்றல் செயல்பாடுகள் முடங்கியுள்ளன.
பல பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் மட்டுமே மாணவர்களை கவனிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

