ஒரே நாளில் கோவைக்கு வருகை தரும் வி.ஐ.பி.,க்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
ஒரே நாளில் கோவைக்கு வருகை தரும் வி.ஐ.பி.,க்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
ADDED : ஏப் 22, 2025 06:34 AM

கோவை: ஒரே நாளில் நான்கு வி.ஐ.பி.,க்கள் கோவை வருகை தர உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
ஊட்டியில் வரும், 25 மற்றும், 26ம் தேதிகளில் துணைவேந்தர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளது. இதில் துணை ஜனாதிபதி, ஜக்தீப் தங்கர் பங்கேற்க உள்ளார்.
இதற்காக அவர் வரும், 25ம் தேதி டில்லியில் இருந்து தனிவிமானத்தில் மதியம், 2:30 மணிக்கு கோவை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து ஊட்டியில் உள்ள தீட்டுக்கல் பகுதிக்கு இந்திய விமானபடைக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் செல்கிறார். அங்கு துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார்.
தொடர்ந்து, 26ம் தேதி ஊட்டி தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டாவுக்கு செல்கிறார். தொடர்ந்து, 27ம் தேதி ஹெலிகாப்டரில் கோவை விமான நிலையம் வரும் துணை ஜனாதிபதி, காலை 10:00 மணிக்கு கோவை வேளாண் பல்கலையில் நடக்கும் நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்களுடன் கலந்துரையாடுகிறார். தொடர்ந்து காலை 11:30 மணிக்கு தனிவிமானம் வாயிலாக டில்லி திரும்புகிறார்.ஊட்டியில் நடக்கும் துணைவேந்தர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க தமிழக கவர்னர் ரவி கோவை வருகிறார்.
அதேபோல், தமிழக துணை முதல்வர் உதயநிதி, வரும், 27ம் தேதி கோவை வருகை தர உள்ளார். கோவையில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளை அவர் துவக்கி வைக்கிறார்.
தொடர்ந்து வனத்துறை அலுவலகத்தில் நடக்கும் பெத்திக்குட்டையில் வனவிலங்குகள் மறுவாழ்வு மையக்கட்டத்தை துவக்கி வைத்து, வனத்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ள நவீன ஆயுதங்களை பார்வையிடுகிறார்.
மாலையில் ஆர்.எஸ்.புரத்தில் நடக்க உள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். தொடர்ந்து பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கிறார்.கோவை-சத்தி ரோட்டில் உள்ள தனியார் கல்லுாரியில், தமிழக வெற்றிக்கழகத்தின் பூத் கமிட்டி கூட்டம் வரும், 26, 27ம் தேதிகளில் நடக்க உள்ளது. இதற்காக அக்கட்சியின் தலைவர் விஜய், கோவை வருகை தர உள்ளார்.
இவ்வாறு, வரும், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் நான்கு வி.ஐ.பி.,க்கள் கோவை வருகை தர உள்ளதால், கோவை மாநகர் மற்றும் மாவட்ட போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
மூன்று நாட்களும் கோவையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.