ADDED : ஜூன் 26, 2025 12:50 AM
சென்னை:பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க, 'கடல் கவசம்' என, அழைக்கப்படும், 'சாகர் கவச்' பாதுகாப்பு ஒத்திகையில், 9,650 போலீசார் மற்றும் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த, 2008 ம் ஆண்டு, மஹாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு, கடல் வழியாக ஊடுருவிய பாக்., பயங்கரவாதிகள், தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தினர். இதில், 175 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்திற்கு பின், நாடு முழுதும் கடலோரப் பகுதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, ஆண்டுக்கு இரு முறை, கடல் கவசம் எனப்படும் 'சாகர் கவச்' பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது.
அந்த வகையில், தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான, சாகர் கவச் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி, நேற்று காலை, 6:00 மணிக்கு துவங்கியது. இதில், இந்திய கடற்படை, கடலோர பாதுகாப்பு படை, கடலோர பாதுகாப்பு குழுமம், வனத்துறை, சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் என, 9,650 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், துாத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி என, 14 காவல் மாவட்டங்களில், பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில், 59 பேர் பயங்கரவாதிகள் போல் ஊடுருவி உள்ளனர்.
போலீசார் மற்றும் அதிகாரிகள், நேற்று மாலை, 4:00 மணியளவில், 59 பேரை பிடித்தனர். சென்னை மீன்பிடி துறைமுகம் பகுதியில், இருவர் சிக்கினர். ஒத்திகையில் இடை மறிப்பு ரோந்து படகுகளும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.