உரிமம் இன்றி துப்பாக்கிகள் பயன்படுத்திய காவலாளிகள் கைது
உரிமம் இன்றி துப்பாக்கிகள் பயன்படுத்திய காவலாளிகள் கைது
ADDED : டிச 06, 2025 02:02 AM
ஓசூர்: உரிமம் பெறாமல், தனியார் நிறுவன பாதுகாப்பிற்கு துப்பாக்கிகள் பயன்படுத்திய இரு செக்யூரிட்டிகள் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பஸ் ஸ்டாண்ட் எதிரே சிட்கோ தொழிற்பேட்டையில், பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட, 'சீக்வெல் லாஜிஸ்டிக்ஸ்' நிறுவனம் இயங்குகிறது.
இங்கிருந்து, வேலுார், திருப்பத்துார், சேலம் உட்பட பல்வேறு மாவட்டங்களிலுள்ள நகைக்கடைகளுக்கு, உரிய பாதுகாப்புடன் தங்க நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.
இங்கு பெங்களூருவைச் சேர்ந்த, 'இன்னோவிஷன் செக்யூரிட்டி ஏஜன்சி' நிறுவனத்தை சேர்ந்தவர்கள், ஆயுத பாதுகாப்பை வழங்கி வந்துள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு ஹட்கோ போலீசார் சோதனை செய்தபோது, செக்யூரிட்டிகள் இருவர், பீஹார் மாநில உரிமம் மட்டுமே வைத்து, இரு துப்பாக்கிகளை பயன்படுத்தியது தெரிந்தது.
விசாரித்தபோது, அவர்கள், பீஹாரை சேர்ந்த ரம்ஜான் அன்சாரி, 53, ராகிப் ஆலம், 28, என, தெரிந்தது. அவர்களை கைது செய்த போலீசார், இரு துப்பாக்கிகள் மற்றும் 10 தோட்டாக்களை பறிமுதல் செய்தனர்.
கோவையில் இயங்கி வந்த, 'சீக்வெல் லாஜிஸ் டிக்ஸ்' நிறுவனத்தில், நவ ., 20ம் தேதி போலீசார் சோதனையில், அந்நிறுவனத்தில் பாதுகாப்புக்கு பயன் படுத்திய துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுக்கு, பீஹார் மாநில உரிமம் மட்டுமே வைத்திருப்பதும், தமிழக உரிமம் எடுக்காமல் இருந்ததும் தெரிந்தது.
இந்த விவகாரத்தில் ஏற்கனவே மூன்று பேரை போலீசார் கைது செய்திருந்தனர்.

