ADDED : மே 09, 2025 09:37 PM
சென்னை:காஷ்மீரில் சுற்றுலா பயணியரை பயங்கரவாதிகள் கொன்றதற்கு பழிவாங்கும் விதமாக, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம் மீது, இந்திய ராணுவம் ஏவுகணைகளை வீசி, தாக்குதல் நடத்தியது. அதைத்தொடர்ந்து, பாக்., ராணுவம் நம் நாட்டின் மீது நடத்திய தாக்குதலுக்கு, இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது.
இதனால், நிலை குலைந்துள்ள பாகிஸ்தான் ராணுவம், விமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த முயற்சித்து வருகிறது. இதையடுத்து, மத்திய அரசு விமான போக்குவரத்தில், பல மாற்றங்களை செய்துள்ளது. எல்லை அருகேயுள்ள விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. வான்வழி போக்குவரத்திலும் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன.
தமிழகத்தில் உள்ள சென்னை, திருச்சி, மதுரை, கோவை விமான நிலையங்களில், பாதுகாப்பு பணியில் உள்ள துணை ராணுவமான, மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது. விமானத்தில் செல்லும் பயணியரின் உடைமைகள், தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.
சந்தேகிக்கும்படி உள்ள பயணியர், விசாரணைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். விமான நிலையங்களில் உள்ள எஸ்.எச்.ஏ., எனும் பாதுகாப்பு சோதனை பகுதியில், கூடுதல் சி.ஐ.எஸ்.எப்., வீரர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
விமான நிலையங்களுக்கு வெளியில், மாநில போலீசாரும் தொடர்ந்து பணியில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. விமான நிலைய வளாகங்கள், முழு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன என்று, அதிகாரிகள் தெரிவித்தனர்.