அவதுாறு பேச்சில் வழக்குப்பதிவு போலீசில் ஆஜராகாத சீமான்
அவதுாறு பேச்சில் வழக்குப்பதிவு போலீசில் ஆஜராகாத சீமான்
ADDED : பிப் 21, 2025 02:47 AM
ஈரோடு:ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் கட்சி வேட்பாளரை ஆதரித்து, நா.த.க., ஒருங்கிணைப்பாளர் சீமான் அசோகபுரத்தில் நடந்த பிரசார கூட்டத்தில், ஈ.வே.ரா.,வை அவதுாறாக பேசிய புகாரில், கருங்கல்பாளையம் போலீசார் மூன்று பிரிவுகளில், அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
நேற்று, கருங்கல்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில், நேரில் ஆஜராகுமாறு, சென்னையில் உள்ள அவரது வீட்டுக்கு பிப். 17ல் சம்மன் தரப்பட்டது. ஆனால், சீமான் நேற்று வரவில்லை.
அவர் கட்சி வக்கீல் நன்மாறன், கருங்கல்பாளையம் ஸ்டேஷனில் ஆஜராகி, சீமான் வழங்கிய கடிதத்தை இன்ஸ்பெக்டரிடம் வழங்கினார்.
பின்னர் நிருபர்களிடம் நன்மாறன் கூறியதாவது:
தேர்தல் நேரத்தில் பேசியதாக தமிழகம் முழுவதும் ஒரே பேச்சை மையமாக வைத்து, பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில், சீமான் மீது, 80க்கும் மேற்பட்ட வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரமாக ஈரோடு உட்பட பல்வேறு ஸ்டேஷனில் ஆஜராக சம்மன் அளிக்கப்பட்டிருந்தது. அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து விசாரிக்க, டி.ஜி.பி., அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. மனு மீது நடவடிக்கை எடுக்கும்வரை, விசாரணையை ஒத்திவைக்க கேட்டுள்ளோம்.
அதேசமயம் கருங்கல்பாளையம் போலீசில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் விபரம் எங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. சி.சி.டி.என்.எஸ்,சிலும் பதிவேற்றம் செய்யவில்லை. வழக்கு விபரங்களை கேட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.