பாரதியின் பிறந்த நாளை தமிழிலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாட வேண்டும்: சீமான் கோரிக்கை
பாரதியின் பிறந்த நாளை தமிழிலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாட வேண்டும்: சீமான் கோரிக்கை
UPDATED : டிச 10, 2024 10:45 PM
ADDED : டிச 10, 2024 10:07 PM

சென்னை: '' பாரதியின் பிறந்த நாளை, 'தமிழிலக்கிய மறுமலர்ச்சி நாள்' எனக் கொண்டாடுவதே பொருத்தமாக இருக்கும்'', என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
'தமிழ்த்தாத்தா' உ.வே.சாமிநாதையரின் பிறந்த நாளான பிப்ரவரி 19ம் தேதியை, தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாட வேண்டும்' என முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி இன்று சட்டசபையில் கோரிக்கை விடுத்தார். இவரது கோரிக்கையை ஏற்பதாக கூறிய முதல்வர் ஸ்டாலின், உ.வே.சாமிநாதையரின் பிறந்தநாளான பிப்.,19ம் தேதி தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாடப்படும் என அறிவித்தார்.
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது: 'தமிழ்த்தாத்தா' உ.வே.சா. பிறந்த நாள், 'தமிழிலக்கிய மறுமலர்ச்சி நாள்' எனக் கொண்டாடப்படும் எனும் திமுக அரசின் அறிவிப்பு குறித்தான செய்தியைக் கேள்வியுற்றேன். தமிழ் இலக்கிய உலகில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது பாரதி தான். அவர் காலம்தான் இலக்கிய உலகில் பெரும் பாய்ச்சலை ஏற்படுத்தியது. ஆகவே, பாரதியின் பிறந்த நாளை, 'தமிழிலக்கிய மறுமலர்ச்சி நாள்' எனக் கொண்டாடுவதே பொருத்தமாக இருக்கும்.
'தமிழ்த்தாத்தா' உ.வே.சா.வின் ஈடில்லா பங்களிப்பைப் போற்ற அவருடைய பிறந்த நாளை, 'தமிழிலக்கியப் பாதுகாப்பு நாள்' எனக் கொண்டாடுவதே சரியாக இருக்கும் , தமிழக அரசு அதனை மாற்ற வேண்டுமென வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் சீமான் கூறியுள்ளார்.

