மலையை அறுத்துவிட்டு குப்பையை கொட்டுகிறார்கள் சீமான் கோபம்
மலையை அறுத்துவிட்டு குப்பையை கொட்டுகிறார்கள் சீமான் கோபம்
UPDATED : ஜூலை 10, 2025 10:15 PM
ADDED : ஜூலை 10, 2025 09:03 PM

மதுரை: கேரள கட்டுமானங்களுக்கு தேவைப்படும் மண், கற்களுக்காக நம்முடைய மலையை அறுத்துக் கொண்டு செல்கிறார்கள். அதற்கு பதிலாக குப்பையை கொட்டுகிறார்கள்,'' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
மதுரையில் 'மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை' என்ற தலைப்பில் நடந்த கூட்டத்தில் சீமான் பேசியதாவது: ஆடு, மாடுகளிடமிருந்து மேய்ச்சல் நிலங்களை திருடுவதை எப்படி சொல்வது, நாடு உங்களுடையது என்றால் காடு எங்களுடையது இல்லையா? இந்தியாவில் 2021 முதல் 22ம் ஆண்டு வரை மாட்டுக்கறி ஏற்றுமதி 24 ஆயிரம் கோடி; பாலின் சந்தை மதிப்பு அதிகமாக உள்ள போது நீங்கள் 50,000 கோடிக்கு சாராயம் விற்று, அதை குடிக்க வைத்து பல தாய்மார்களின் தாலியை அறுத்து வருகிறீர்கள்; கால்நடை துறையின் வேலை என்ன கால்நடைகளை பற்றி கவலைப்படாத துறைக்கு கால்நடை துறை என பெயர்.
இன்று கனிம வளக் கொள்ளையால், மேய்ச்சல் நிலங்கள் பாதிக்கப்படுவதால் நாட்டின மாடுகள் அழிந்துவிட்டன. ஆடு மாடுகளை திருடுபவர்கள், இன்று மேய்ச்சல் நிலங்களையே திருடுகின்றனர். இதை எங்கே போய் சொல்வது என மாடுகள் கேட்கின்றன. விவசாயத்துக்காக தான் டிராக்டர் கொண்டு வரப்பட்டது. ஆனால் டிராக்டர்களை பயன்படுத்துவதற்காக ஆயிரக்கணக்கான மாடுகள் கொல்லப்பட்டன. நாட்டு மாடுகளை அழிக்க வேண்டும் என்று திட்டமிட்டுதான் நவீன விவசாயம் கொண்டு வரப்பட்டது. ஆயிரக்கணக்கான மாடுகள் கொன்று குவிக்கப்பட்டதால, உலக நாடுகள் பால் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் நிலையில், இந்தியா பின்தங்கி உள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையின் தொடக்கம் கேரளா, அங்கு கட்டுமானங்களுக்கு தேவைப்படும் மண், கற்கள் கன்னியாகுமரியில் இருந்து செல்கிறது; நம்முடைய மலையை அறுத்துக் கொண்டு செல்கிறார்கள்; அதற்கு பதிலாக மருத்துவ கழிவுகளை இங்கு கொட்டுகிறார்கள்; அவர்கள் மலை அங்கு பாதுகாப்பாக உள்ளது; இதற்கு அனுமதி கொடுத்தது யார்? பாறைகளுக்கு வெடிவைத்து தகர்க்கும் போது பாதிக்கப்படாத வனவிலங்குகள், நாங்கள் அடிப்பகுதியில் ஆடு, மாடுகளை மேய்ப்பதால் பாதிக்கப்படும் என்பதை எப்படி ஏற்பது.
காடு எங்களுக்கு சொந்தம் இல்லை என்றால் எப்படி ஏற்பது. சட்டம் என சொல்கிறீர்கள். மக்களுக்காக சட்டங்களும், திட்டங்களா? அல்லது சட்டத்துக்காக மக்களா இதனை மக்கள் ஏற்கின்றார்களா? மலைகளை வெட்டி விற்கும் போது அழியாத வளம், மேய்ச்சலினால் அழிந்துவிடப்போகிறதா?
ஆடு மாடு மேய்ப்பது அவமானம் ஆகிவிட்டதா ?ஆடுமாடுமேய்ப்பது அவமானம் அல்ல வெகுமானம் என அறியாத வரை நாடு வளராது. ஆடு மாடு மேய்ப்பது தொழில் அல்ல. எங்கள் வாழ்க்கை முறை பண்பாடு. வாழ்வியலோடு இணைந்த கலாசாரம் அது. இதனை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அறுவடைக்கு பண்டிகை கொண்டாடியவனும், தமிழன். மாட்டுக்கு பொங்கல் வைத்து கொண்டாடியவனும் தமிழன் தான்.வெண்மை புரட்சி என பேசுகிறார்கள். பால் இல்லாமல் புரட்சி ஏது ?பாலும் பசுவும் இல்லாமல் வெண்மை புரட்சி ஏது? செயற்கை உரங்களினால், நமது பாரம்பரிய விதைகள் பாதிக்கப்பட்டன. வைக்கோலை அழித்துவிட்டனர். உரம் என்ற பெயரில் நச்சை வயலில் கொட்டுகிறீர்கள். செயற்கை உரத்தை கொட்டும் போது நிலம் மலடானது.
மேய்ச்சல் நிலம் ஒரு சதவீதம் தான் உள்ளது என்கின்றார்கள். ஆக்கிரமிப்பாளர்கள் அதனையும் குறி வைக்கின்றனர். நாட்டு மாட்டு இனத்தை அழிக்க ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. அதற்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.
ஆடு மாடும் இல்லாமல் இயற்கை வேளாண்மை ஏது? பால் இருக்கும் நாடு பசியை எதிர்கொள்ளாது. சந்திக்காது. ஒரு நாட்டில் டாக்டர்களுக்கு அதிக மதிப்பு இருக்கிறது என்றால், அந்நாடு நோயுற்ற சமூகமாக, நோயாளிகள் அதிகம் கொண்ட நாடாக மாறுகிறது என்று பொருள்.
நீதிபதி, போலீசுக்கு அதிக மதிப்பு உள்ளது என்றால், குற்ற சமூகமாக குற்றவாளிகள் அதிகம் கொண்ட நாடாக மாறி கொண்டு உள்ளது என்று அர்த்தம்.
ஆசிரியர்கள், விவசாயிகளுக்கு மதிப்பு இருந்தால் அந்நாடு பசியின்றி நலமாக வாழ்கிறது. அறிவுப்பசி கொண்டு உள்ளது. ஆசிரியர்களை போற்றும் நாடு அறிவார்ந்த சமூகமாக வாழ்கிறது என்று பொருள்.
டாஸ்மாக் வேலையை அரசு வேலை என்று பார்க்கும் நீங்கள், ஆடுமாடு வளர்ப்பதை அவமானம் என்கின்றீர்கள்.
கால்நடை டாக்டர் அரசு மருத்துவராக இருக்கலாம். ஆடு, மாடு மேய்ப்பவர் அரசு ஊழியராக இருக்கக்கூடாதா,
பொறியியல் படித்த 400 பேர் வாட்ச் மேன் வேலைக்கு விண்ணப்பித்துள்ளனர்.
பில்கேட்ஸ் 2 லட்சம் ஏக்கரில் விவசாயம் செய்கிறார். நடிகர் நெப்போலியன் 500 ஏக்கரில் புல் வளர்க்கிறார். அதில் பல லட்சம் சம்பதிக்கிறார்.
ஆனால், பொருளாதாரம் தெரியாத நபர்களிடம் நாட்டை கொடுத்துவிட்டு, சாராயத்தை குடித்து இறந்து போகின்றனர். போலீஸ் அடித்து செத்தால் ரூ.5 லட்சம். கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் ரூ.10 லட்சம். எப்படி நாட்டை வழிநடத்தி செல்கின்றனர் என்பதை சிந்திக்க வேண்டும்.
அமலாக்கத்துறை சோதனை வந்த போது எதிர்த்து போராடி தடுத்து நிறுத்தினீர்களா, நேரில் சென்று கெஞ்சி நிறுத்தினீர்களா,
தற்போது சத்தம் ஏன் நின்றுவிட்டது. இடையில் என்ன நடந்தது. ஆனால், இன்னும் பா.ஜ.,வை வரவிடாமல் தடுக்கிறோம் என்று சொல்கின்றனர். பா.ஜ., எங்கு உள்ளது. ஆடு மாடுகளை கவலைப்படாத நீங்கள் ஆவின் பால் விற்பது எதனால். இவ்வாறு சீமான் பேசினார்.