பள்ளி அறைகளில் பாலியல் கறைகள் அலட்சியமாக அல்வா சாப்பிடும் முதல்வர் * சீமான் காட்டம்
பள்ளி அறைகளில் பாலியல் கறைகள் அலட்சியமாக அல்வா சாப்பிடும் முதல்வர் * சீமான் காட்டம்
ADDED : பிப் 07, 2025 10:19 PM
சென்னை:'பள்ளி அறை எங்கும் பாலியல் கறைகள் இருக்கும் நிலையில், அலட்சியமாக முதல்வர் அல்வா சாப்பிடுகிறார்' என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
கிருஷ்ணகிரி மாவட்டம், நடுநிலைப்பள்ளியில், எட்டாம் வகுப்பு மாணவியை, ஆசிரியர்கள் நால்வர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். இது மறைவதற்குள், மணப்பாறை தனியார் பள்ளி சிறுமியிடம், தாளாளர் உள்ளிட்டோர் பாலியல் துன்புறுத்தல் செய்தி இதயத்தை நொறுங்க செய்கிறது.
தி.மு.க., ஆட்சியில் பள்ளிக் குழந்தைகள் முதல் பல்கலை மாணவி, பெண் காவலர்கள் வரை, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் கொடுமைகள் நடந்தேறி வருகின்றன. வீட்டை விட்டு வெளியே சென்ற பெண் குழந்தைகள், மீண்டும் பாதுகாப்பாக வீடு திரும்புவரா என, பெற்றோர் ஒவ்வொரு நாளும் பரிதவிக்கும் கொடுமையான நிலைக்கு மக்களை, தி.மு.க., தள்ளிவிட்டு உள்ளது.
பெண்களுக்கு எதிரான இத்தனை கொடுமைகளையும் வேடிக்கை பார்க்கும் தி.மு.க., அரசு, பெண் சுதந்திரம், பெண்கள் பாதுகாப்பில் முதலிடம் என பேசுவதற்கு வெட்கி தலைகுனிய வேண்டும்.
காவல் துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வர், பள்ளி குழந்தைகள் பற்றி துளியும் கவலையின்றி, திருநெல்வேலியில் அல்வாவை ரசித்து ருசித்து சாப்பிட்டு கொண்டிருக்கிறார் என்பது வேதனையின் உச்சம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.