தனித்து தான் போட்டி போடுவோம்; கூட்டணி சரிவராது என்கிறார் சீமான்!
தனித்து தான் போட்டி போடுவோம்; கூட்டணி சரிவராது என்கிறார் சீமான்!
UPDATED : ஜூன் 14, 2025 02:38 PM
ADDED : ஜூன் 14, 2025 02:33 PM

தூத்துக்குடி: ''தனித்து தான் போட்டியிடுவோம். கூட்டணி சரிவராது. மக்களை நம்பி, தனியாக நின்று மக்களுக்காக போராடுவோம்'' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் நிருபர்கள் சந்திப்பில் சீமான் கூறியதாவது: பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் அதிகாரத்திற்கு நெருக்கமானவர்களாக உள்ளனர். தமிழ் கடவுள், தமிழ் என்றாலே முருகன். கோவில் கட்டியது நாங்கள். எங்கள் தாய் மொழியில் குடமுழுக்கு இருக்காது. இது எவ்வளவு பெரிய கொடுமை.
எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பது வெறும் வெற்று முழக்கம். ஒவ்வொரு முறையும் நீதிமன்றம் சென்று வழக்கு தொடுத்து தான் உரிமையை பெற்றுள்ளோம். சைவத்தில் இருந்து தமிழை பிரிக்க முடியாது.
தமிழில் இருந்து சைவத்தை பிரிக்க முடியாது. தமிழ் அழிந்தால் தமிழ் இனம் அழிந்து விடும். தி.மு.க.,வின் 4 ஆண்டு சாதனை, மின் கட்டணம் குறையவில்லை. சொத்து வரி குறையவில்லை.
கேளிக்கை வரி நான்கு சதவீதம் குறைகிறது. இது யாருக்கும் பயன் தரும். அமலாக்கத்துறை சோதனை வந்த பிறகு முதல்வர், பிரதமர் மோடியின் கையைப் பிடித்துக் கொண்டு பேசுகிறார். யார் அந்த சார்? என்பது இருக்கட்டும். கொடநாட்டில் கொலை செய்த அந்த சார் யார்? தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு அனுமதி கொடுத்த அந்த சார் யார்?
எனக்கு ஒரே மாற்றம் தான். இந்த நாட்டில் இருக்கும் மொத்த அரசியலையும் மாற்றுவது தான் என்னுடைய நோக்கம், கனவு. கூட்டணி என்பது கிடையாது. தனித்து தான் போட்டியிடுவோம். கூட்டணி சரிவராது. மக்களை நம்பி, தனியாக நின்று மக்களுக்காக போராடுவோம். இவ்வாறு சீமான் கூறினார்.